கட்சி ஆரம்பிக்காததால் சிரமம்… கடனில் மூழ்குது லதா ரஜினியின் ஆஸ்ரம்!

Published On:

| By Balaji

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியை நிர்வகித்து வரும் ஸ்ரீராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளராக அவர் இருக்கிறார். இந்தப் பள்ளி அமைந்துள்ள இடத்துக்கு கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் வரை 1.99 கோடி ரூபாய் வாடகையைக் கல்விச் சங்கம் செலுத்தவில்லை என்று புகார் கிளம்பியது. இதற்காக இடத்தின் உரிமையாளர்கள் வெங்கடேஸ்வரலு, பூர்ணசந்திர ராவ் ஆகியோர் 2014ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்னும் வாடகை செலுத்தப்படாததால், 2017ஆம் ஆண்டில் பள்ளிக்குப் பூட்டுப் போட்டனர். நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று பள்ளியைத் திறந்த லதா, 2020 ஏப்ரலுக்குள் இடத்தைக் காலி செய்வதாக ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையில் கொரோனா வந்து விட்டது. அதனால் இடத்தைக் காலி செய்வதற்கு மேலும் ஓராண்டு அவகாசம் கேட்டு லதா சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாத வாடகை எட்டு லட்சம் ரூபாயுடன் டி.டி.எஸ் தொகையையும் சேர்த்துச் செலுத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் இடத்தைக் காலி செய்ய வேண்டுமென்று கூடுதலாக காலஅவகாசம் கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அதற்குள் காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு செய்யப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள், வரும் கல்வியாண்டுக்கு கிண்டியில் இயங்கும் ஆஸ்ரம் பள்ளியில் மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

லதா ரஜினியின் பள்ளி வாடகை பாக்கி பிரச்சினை, அது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் அவ்வப்போது நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்து சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. #வாடகை எங்கே ரஜினி என்ற ஹேஷ்டேக் வைரலாகப் பரவியது. உடனடியாக ஸ்ரீ ராகவேந்திரா கல்விச்சங்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டு, ‘லதா ரஜினி எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை. முறையாக வாடகை செலுத்தி வருகிறோம். எங்களுக்கு இடத்தைக் காலி செய்ய கால அவகாசம் உள்ளது. மாணவர்களின் நலனைக் காப்பதற்காக மாற்று இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்று மக்களுக்கு விளக்கியது. பள்ளியின் வருவாயை விட அந்த இடத்துக்கான வாடகை அதிகமென்பதே சங்க நிர்வாகிகளின் பதிலாக இருந்தது.

இவ்வாறு பள்ளி இடம் தொடர்பான சட்டரீதியான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், இந்தப் பள்ளியை விற்பதற்கு லதா ரஜினிகாந்த் தரப்பில் முயற்சி நடந்திருக்கிறது. ஏறத்தாழ 32 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருந்ததால் பள்ளியை அதை விட அதிக விலைக்கு விற்பதற்குப் பல்வேறு பெரிய பள்ளி நிர்வாகங்களிடமும், சில பெரும் புள்ளிகளிடமும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த முயற்சிக்கிடையில்தான் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த பரபரப்பும் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்தது. எப்படியும் ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரை எப்படியாவது தங்களுடைய வலையில் வீழ்த்த வேண்டுமென்று லதா ரஜினியின் பள்ளியை வாங்குவதற்கு சிலர் முயன்றுள்ளனர்.

இதுகுறித்து ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தோம். மிகவும் ரகசியமாக நடந்த அந்த அரசியல் பேரம் பற்றி நம்மிடம் சிலர் விளக்கினர்…

‘‘நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி அறிவித்ததும் அவருடைய கட்சியில் முக்கியப் பொறுப்பைப் பிடிப்பதற்கு பல்வேறு கட்சிகளில் உள்ள முன்னாள் மக்கள் பிரதிநிதிகளும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். அதேநேரத்தில் ரஜினியின் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, பாரதீய ஜனதாவின் ஆதரவையும் மறைமுகமாகப் பெற்றுக் கொள்ளலாம்; இங்கேயும் நமக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கலாம் என்று சில சிறிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நினைத்தார்கள்.

அப்போதுதான் ஆஸ்ரம் பள்ளியை விற்பதற்கான முயற்சியில் லதா ரஜினி இறங்கியிருந்தார். இதைத் தெரிந்துகொண்ட டிடிவி தினகரன் தரப்பு, பள்ளியை 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வதற்கு தயார் என்று தூது விட்டுள்ளது. இந்தப் பள்ளியை வாங்குவதன் மூலமாக ரஜினியின் கட்சியுடன் எளிதில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்று கணக்குப் போட்டு அவர் தரப்பு இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளியை விற்பது தொடர்பாக ஆவண நகல்கள் எல்லாமே கைமாறியிருந்தன.

விரைவில் எல்லாமே முடிந்துவிடுமென்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், ரஜினியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவர்களின் அறிவுறுத்தல், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வேண்டுகோளால் ‘அரசியலுக்கு வர இயலாது’ என்று ரஜினி மக்களிடம் மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிடும் சூழல் உருவானது. ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றதும் திடீரென தினகரன் தரப்பு பின் வாங்கியது. தற்போதுள்ள சூழ்நிலையில் அவ்வளவு பெரிய தொகையைப் புரட்ட முடியவில்லை என்று கூறி பள்ளியை வாங்கும் திட்டத்தையே கைவிட்டது. முழுக்க முழுக்க அரசியல் லாபத்துக்காக இந்தப் பள்ளியை வாங்குவதாகக் கூறிய தினகரன், ரஜினியால் இனி நமக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெரியவந்ததும் பின்வாங்கிவிட்டார். இது லதா ரஜினிக்கு மட்டுமின்றி, ரஜினிக்கும் அவருடைய குடும்பத்துக்கும் பெரும் மனவருத்தத்தைக் கொடுத்துள்ளது. தேர்தலும், புதிய கல்வியாண்டும் நெருங்கிவரும் நிலையில் பள்ளிக்கு புதிய இடமும் கிடைக்காமல், பள்ளியை விற்கவும் முடியாமல் பெரும் சிரமத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம்!’’ என்று விரிவாக விளக்கினர்.

டிடிவி தினகரன் தரப்பில் நாம் கேட்டதற்கு, ‘‘ரஜினியோ, அவருடைய குடும்பத்தினரோ நினைத்தால் இந்தப் பள்ளியின் கடனை ஒரே நாளில் அடைத்துவிட முடியும். பள்ளியை விற்க வேண்டுமென்ற அவசியமே இல்லை. அப்படியிருக்கையில் எங்களிடம் அவர்கள் பள்ளியை விற்க முயன்றதாகவும், அரசியலுக்காக நாங்கள் வாங்க ஒப்புக்கொண்டு, அரசியலுக்கு வரவில்லை என்றதும் வாங்க மறுத்ததாகவும் கூறப்படுவது கற்பனையான விஷயம். ரஜினிக்கும் தினகரனுக்கும் இப்போது நல்ல நட்பு தொடர்கிறது!’’ என்று மலைக்க வைத்தனர்.

ஆஸ்ரம்… இந்தச் சிக்கலில் இருந்து விரைவில் மீண்டெழுந்து வர வேண்டும் , பள்ளியை நம்பியுள்ள மாணவர்களுக்கு நல்ல கல்வியைத் தர வேண்டும்!

**– பாலசிங்கம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share