காங்கிரஸ் மீது பாய்ந்த கமல்ஹாசன்: பின்னணி என்ன?

Published On:

| By Balaji

மூன்றாவது அணியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, திமுகவை தவிர வேறு யாருடனும்பேசவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மறுத்திருந்த நிலையில்…நேற்று (மார்ச் 7) இரவு சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தன்னோடு பேசியதை போட்டுடைத்திருக்கிறார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.

சென்னை தங்கசாலை சந்திப்பில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “மூன்றாவது அணி வென்றதாக சரித்திரமே இல்லை என்று சொல்லிக் கொண்டு, சிதம்பரம் அண்ட் சன்ஸ் காங்கிரஸுடன் வந்து சேருங்கள் என்று அழைக்கின்றனர். வெல்லாத கட்சியை அப்படி எதற்கு அழைக்கிறீர்கள்?

எனது அப்பா காங்கிரஸில் இருந்தார். அதனால் காங்கிரஸ் மீது மரியாதை உண்டு. வெள்ளைக் காரர்களிடமிருந்து நாட்டை மீட்ட அந்த கட்சியை சேர்ந்தவர்கள், கொள்ளைக்காரர்களுக்கு வாட்ச் மேனாக இருப்பது வருத்தமாக இருக்கிறது.

மூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டு, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். வதந்தி என்று அவர்கள் சொல்லுகிறார்கள். இல்லை என்று நான் சொல்லுகிறேன்”என்று காங்கிரஸ் மீது தனது கடும் கோபத்தைக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.

இதற்கு காரணம் இருக்கிறது.

திமுக அணியில் மிகக் குறைந்த சீட்டுகளே தருவதாக ராகுலுக்கு தகவல் சொல்லப்பட்ட நிலையில் ராகுல்காந்தியே கமல்ஹாசனிடம் பேசியிருக்கிறார். தன்னுடைய பர்சனல் மொபைல் நம்பரை கமல்ஹாசனிடம் தந்த ராகுல் காந்தி, ‘எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசுங்கள்’ என்று கமலிடம் சொல்லியிருந்தார்.

கமலுடன் சேர்ந்து அதிக இடங்களில் போட்டியிட்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்பது ராகுலின் திட்டம். அதேபோல தன்னை பிஜேபியின் பி டீம் என்று விமர்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதைவிட சிறந்த பதிலை தர முடியாது என்பதால் கமலும் காங்கிரஸ் கூட்டணியில் ஆர்வமாக இருந்தார். மேலும் நாட்டின் மிக மூத்த அரசியல் கட்சி, மிக இளைய கட்சியான மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பது என்பது தனக்கு தேசிய அளவிலான கௌரவம் என்றும் கருதினார் கமல்ஹாசன்.

இந்தப் பின்னணியில்தான் சத்தியமூர்த்தி பவனில் நடந்த மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கூட, “கமல்ஹாசனோடு கூட்டணி சேரலாமா?” என்று கேள்வி கேட்டார் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ். ஆனால் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் காங்கிரஸ் மீண்டும் அறிவாலயம் சென்று 25 சீட்டுகளுக்கு கையெழுத்திட்டது.

ராகுல் காந்தியே கமல்ஹாசனைத் தொடர்புகொண்டு, “நான் தமிழகத்தில் கட்சியை வளர்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் சட்டமன்ற பதவிகள், நாடாளுமன்ற பதவிகள். உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஆசைப்பட்டு காங்கிரஸில் சில மூத்த தலைவர்கள் அதைத் தடுக்கிறார்கள்” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராகுலிடம் பேசி மக்கள் நீதி மய்ய கூட்டணியைத் தடுத்ததில் ப.சிதம்பரத்துக்கு முக்கியப் பங்கிருப்பதாக நினைக்கிறார் கமல்ஹாசன். இந்த பின்னணியில்தான் பொதுக்கூட்டத்தில் காங்கிரசை வறுவறு என வறுத்தெடுத்துவிட்டார் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்திலேயே.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share