கலைஞரின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டுமென தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு வரும் ஜூன் 3ஆம் தேதி 97 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் கலைஞரின் பிறந்தநாள் திமுக தொண்டர்களால் நலத் திட்ட உதவிகள், சமபந்தி என சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மே 26) தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கலைஞர் பிறந்தநாளை நாம் கொண்டாடுவது என்பது, தலைவரைப் போற்றிப் பாராட்டுவதற்காக மட்டுமல்ல; அவர் செய்து வைத்த அளப்பரிய சாதனைகளுக்கு நாம் செலுத்தும் நன்றியின் காணிக்கையாகத்தான் அத்தகைய பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடி, குதூகலம் கொண்டோம்”என்று கூறியுள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இந்த காலத்தில் கலைஞர் இருந்திருந்தால், திமுகவின் பணிகளைப் பார்த்துப் பரவசம் கொண்டிருப்பார். இவற்றைச் செய்யவே இன்முகத்துடன் கட்டளையிட்டிருப்பார். அவரே பல இடங்களில் பொருட்கள் வழங்க ஓடோடி வந்திருப்பார். அத்தகைய தலைவரின் பிறந்தநாளான ஜூன் 3-ம் நாளையும், இதுபோன்ற நல்ல உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்குதல், அத்தியாவசிய பொருட்களை வழங்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்தல், அபலைகள், வீடற்றவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளித்தல் என நம்மால் முடிந்த அளவிலான பணிகளை கலைஞர் பிறந்தநாளில் செய்வதன் மூலமாக, அந்தச் செந்தமிழர் தலைவர், எங்கும் நிறைந்தும் வாழ்கிறார், எல்லோரையும் வாழ வைக்கிறார், வாழ்வாங்கு வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிப்போம் என்று கூறியுள்ள ஸ்டாலின்,
“ஜூன் 3 கலைஞரின் பிறந்தநாள் மட்டுமல்ல. அவர் பிறந்ததன் நோக்கங்களை, அவரது இலட்சியங்களை, நாம் நம் இதயங்களில் ஏந்தி நிறைவேற்றிடவும், நிறைவேற்ற உறுதி கொள்ளவுமான நாள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
**எழில்**�,