நாடே கொரோனா பிடியில் முடங்கிக் கிடக்கும் நிலையில், சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் கண் அயராது மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் குடும்பத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகின்றனர் காவல் துறையினர். தமிழகத்தில் கொரோனா பணியில் ஈடுபட்ட 60 போலீசார் உயிரிழந்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்களப் பணியாளர்களாகச் செயல்படும், ஒரு சில காவல் துறை அதிகாரிகள் தங்களது வேலையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், ஊரடங்கு காலகட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் காஞ்சனா, கஞ்சி செய்து அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்குக் கொடுத்து வருகிறார்.
நுங்கம்பாக்கம் சிலை திருட்டு தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும் காஞ்சனா, சமூக அக்கறையுடன் இச்செயலைச் செய்து வருகிறார். ராஜீவ்காந்தி மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு உடல் சக்தியை அதிகரிக்கவும், அவர்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளும் வகையிலும் அரிசி கஞ்சி தயார் செய்து கொண்டு வந்து வழங்குகிறார்.
கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் காலை 9 மணிக்கு அரிசிக் கஞ்சி கொடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் காவல் ஆய்வாளர் காஞ்சனா. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசுடன் இணைந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு முதல் அலை பரவலின் போது, சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது, மருத்துவர்களின் இறப்பை அவமதிக்கக் கூடாது என்று தெரிவித்த ஆய்வாளர் காஞ்சனா, இதுபோன்ற நிகழ்வுகள் மனவேதனையை தருகிறது. ஒருவேளை கொரோனாவால் மருத்துவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் இறுதிச் சடங்குகளை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தாமே முன் நின்று செய்கிறேன் என்று கூறியிருந்தார்.
தற்போது இரண்டாம் அலையின் போது மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை எளிய மக்களின் பசியாற்றி வருகிறார் ஆய்வாளர் காஞ்சனா. கொரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு உதவி வரும் ஆய்வாளர் காஞ்சனாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
**-பிரியா**
�,