2021 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், ஒருவேளை விரைவில் தேர்தல் வந்துவிடுமோ என்ற யூகத்தில், தேர்தல் சிறப்பு பொதுக்குழுவை இன்று (மார்ச் 1) சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் நடத்தியுள்ளது பாமக.
பொதுக்குழுவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜிகே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழுவில் அரசியல் தீர்மானம் தவிர மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அரசியல் தீர்மானத்தில், “தேர்தல் வெற்றிக்காக ஆயிரம் ஆயிரம் தந்திரங்கள் இருந்தாலும் மருத்துவர் ராமதாஸ் கற்றுத்தந்த வெற்றி மந்திரம் மக்களை சந்திக்க வேண்டும் என்பதுதான்.
மக்களிடம் செல்லுங்கள், அவர்களில் ஒருவராக வாழுங்கள், அவர்களை நேசியுங்கள், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், அவர்களிடமிருந்து தொடங்குங்கள், அவர்களுடன் சேர்ந்து உழையுங்கள், அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டமையுங்கள் என்று சீன தத்துவஞானி லாவோ-சீயின் வரிகள்தான் ராமதாசின் வழிகாட்டுதல்.
மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை அறிந்து நிறைவேற்றினால் அவர்கள் நம்மை அதிகாரத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனை பக்கங்களை பார்த்தால் அவற்றில் பாமகவின் பெயர்தான் நிறைந்திருக்கும். மக்கள் நலனுக்கான அறிக்கைகள், போராட்டங்கள், நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான வழிகள் என பாமக ஆற்றிய பணிகளுக்கு இணையாக தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் எந்தக் கட்சியும் செய்ததில்லை.
ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது மட்டும் தொடுவானம் ஆக நீண்டுகொண்டே செல்கிறது. இதற்குக் காரணமான நமது செயல்பாட்டில் உள்ள குறைகளை களைந்து மக்களுடன் மக்களாக கலந்து பணியாற்றுவதன் மூலம் இந்த இலக்கை அடைய வேண்டும். உங்களுக்காக மருத்துவர் ராமதாஸ் வகுத்தளிக்கும் பாதையில் பயணித்து அவர் கொடுக்கும் வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அதிகார இலக்குகளை அடைய பாடுபடுவோம் என பொதுக்குழு உறுதியேற்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தவிர தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்பிஆர்) எதிராக தமிழக அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், சமூக நீதிக்கு எதிரான கிரிமிலேயர் முறையை ரத்து செய்ய வேண்டும், சிஏஏ சட்டம் தொடர்பாக நாடு முழுதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களிடம் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது பாமகவின் தேர்தல் சிறப்புப் பொதுக்குழு.
**வேந்தன்**�,