தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளைச் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு கடந்த 1ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது.
டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது ஆக்கிரமிப்புகள் தொடர்பாகத் தலைமைச் செயலாளர் டிசம்பர் 8ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது தலைமைச் செயலாளர் இறையன்பு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த அறிக்கை வெறும் சம்பிரதாயத்திற்காகத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதோடு தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி தலைமைச் செயலாளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி தமிழகத்தில் நீர்நிலைகள் குறித்த விவரங்கள் முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 16ஆம் தேதி தலைமைச் செயலாளர் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து தலைமைச் செயலாளர் ஆஜராவதிலிருந்து நீதிபதிகள் விலக்கு அளித்தனர்.
இந்நிலையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு இன்று (டிசம்பர் 16) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்பைத் தடுக்க தவறினால் அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரியும் என்பதால் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் நீர்நிலைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை என்று தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் மீண்டும் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அகற்றப்பட வேண்டும். அதுபோன்று தலைமைச் செயலாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
**-பிரியா**
�,