ஒன்றிய அரசின் புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 23) நகைக்கடைகள் முற்பகல் 11.30 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒவ்வொரு தங்க நகைக்கும் 6 இலக்கம் கொண்ட ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தர முத்திரை வழங்கும் மையங்களில் போதுமான வசதிகள் இல்லாததால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் முடங்கியுள்ளதாக தங்க நகை வியாபாரிகள் மற்றும் தங்க நகை தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள தங்க நகை வணிகம், இந்த புதிய விதியால் மேலும் பாதிப்பை சந்திக்கும் என நகை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே ஒன்றிய அரசின் இந்த புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று (ஆகஸ்ட் 23) முற்பகல் 11.30 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் அடைக்கப்பட்டு அடையாளப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தங்க நகைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, 2021ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் ஹால்மார்க் முத்திரையுடன்தான் தங்க நகைகளை விற்க வேண்டும் என்று கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந்த உத்தரவு கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் மாதம் தங்க நகை விற்பனையாளர்களுடன் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.
இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அனைத்து நகைக்கடைக்காரர்களும் தற்போது, ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் முத்திரையை வரவேற்றாலும் அதில் உள்ள பல்வேறு சிக்கல்களை எடுத்துச்சொல்லி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட 256 மாவட்டங்களில் 50 நாட்கள் முடிந்துள்ள நிலையில், ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற உத்தரவை ஒன்றிய அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி அகில இந்திய நகைக்கடைக்காரர்கள் கவுன்சில் சார்பில் இன்று (ஆகஸ்ட் 23) அடையாள வேலை நிறுத்தம் செய்ய, நகைக்கடைக்காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், இந்தப் போராட்டத்தை கைவிடும்படி ஒன்றிய அரசு நேற்று இந்த அமைப்பை வலியுறுத்தியது. இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைப்பின் தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி, “கட்டாய ஹால்மார்க் திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அறிமுகமான 50 நாட்களில் ஒரு கோடி தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹால்மார்க் பதிவுக்காக விண்ணப்பித்த நகைக்கடைக்காரர்களின் எண்ணிக்கை 35,000இல் இருந்து 91,603 ஆக உயர்ந்துள்ளது.
பெரும்பாலான நகைக்கடைக்காரர்கள் ஹால்மார்க் கட்டாயமாக்கியதை வரவேற்றுள்ளனர். ஆனால், சிலர் கடை அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். குறைகளைச் சரி செய்ய இந்த அரசு காத்திருக்கிறது. எனவே கடை அடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஒன்றிய அரசின் இந்த புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று (ஆகஸ்ட் 23) முற்பகல் 11.30 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் அடைக்கப்பட்டு அடையாள போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
**-ராஜ்**
.�,