தமிழகத்துக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டுமென நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 40வது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று (ஜூன் 12) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான மற்றும் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய பல்வேறு பரிந்துரைகள் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தமிழகத்தின் சார்பில் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவை தொகை மற்றும் வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு போன்ற கோரிக்கைகள் முன் வைத்தார்.
அவர் பேசுகையில், “2017-2018 ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி தொகை ரூ.4,073 கோடியை விரைந்து வழங்கிட வேண்டும். மேலும், 2018-2019ஆம் ஆண்டில் நிலுவையாக உள்ள ரூ.553.01 கோடி மற்றும் 2019-2020ஆம் ஆண்டில் நிலுவையாக உள்ள ரூ.1,101.61 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
துணி மற்றும் ஆயத்த ஆடை மீதான வரியானது 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்த்துவது ஏற்புடையது அல்ல என்ற வாதத்தை எடுத்துவைத்த அமைச்சர், “உரங்கள் மீதான வரியினை 5%-லிருந்து 12%-ஆக உயர்த்துவதால், உரங்கள் மீதான விலை அதிகரிக்கும் என்பதால் இந்த கருத்துரு முற்றிலும் ஏற்புடையதாக இல்லை” என தனது எதிர்ப்பினை அமைச்சர் பதிவு செய்தார். மேலும் பல்வேறு பொருட்களுக்கு வரிவிலக்கு மற்றும் வரிக்குறைப்பு அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இறுதியாக செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜூலை 2017 முதல் ஜனவரி 2020 வரையிலான கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில், ஏராளமான ஜிஎஸ்டி வரி கணக்குகள் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. வரியை முழுமையாக செலுத்தியிருந்தால் ஜிஎஸ்டி கணக்கு தாக்கலில் தாமதம் ஆனாலும் அபராதம் இருக்காது.
5 கோடி ரூபாய் வரை வணிகம் செய்யும் வர்த்தகர்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஜிஎஸ்டி வரி கணக்கை தாமதமாக செலுத்துவதற்கான வட்டி விகிதம் 18 லிருந்து 9 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே வட்டிவிகிதக் குறைப்பு அமலில் இருக்கும்” என்று தெரிவித்தார்.
**எழில்**�,