இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இனி ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்குப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 100 டன் ஸ்வீட் ஆர்டரை ஒரே நிறுவனத்துக்கு வழங்குவதற்காக டெண்டர் விதிமுறைகளைத் திருத்தியது தொடர்பாக மின்னம்பலத்தில் [ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!](https://minnambalam.com/politics/2021/10/21/13/deepavali-tamilnadu-transport-corporation-sweet-tender-minister-rajakannappan) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதன் எதிரொலியாக, அனைத்து துறையினரும் ஆவினில் தான் ஸ்வீட் வாங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவின் பேரில் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பினார்.
இதனால், 2021 தீபாவளி பண்டிகைக்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆவினில் ஸ்வீட் விற்பனையானதாகவும், 2020ல் 55 கோடிக்கு ஆவின் ஸ்வீட் விற்பனையான நிலையில், இது அதிகரித்து 2021ல் 83 கோடி ரூபாய்க்கு விற்பனையானது எனவும் பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
இந்நிலையில் முதன்முறையாகப் பொங்கலுக்கு ஆவின் நெய் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதனால் ஆவின் நிர்வாகம் சார்பில் பொங்கலுக்கு 100 மி.லி. அளவில் மொத்தம் 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
ஆவின் நெய் விற்பனை மூலம் தோராயமாக ரூ.135 கோடி வருமானம் கிடைக்கும் என்றும், இதன்மூலம் 19 லட்சம் கால்நடை விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்தது.
இந்த சூழலில், இனி வரும் காலங்களில் தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆவின் நெய்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்களுக்கு ஆணையர் ஜெ.குமரகுருபரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள், இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய் பொருட்களைக் கொள்முதல் செய்ய உத்தரவிடுமாறும், ஆவின் நிறுவனத்தில் 15 மி.லி. பேக்கிங்கில் இருந்து 20 கிலோ எடை கொண்ட பேக்கிங் வரை விற்பனைக்குத் தயாராக உள்ளன என்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், கோயில் கருவறை, பிரகாரங்களில் தரமற்ற நெய்யைப் பயன்படுத்தி விளக்கு, தீபம் ஏற்றும் போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவும், பிரசாதங்களின் தரத்தை மேம்படுத்தவும், கோயில்களில் விளக்கு ஏற்றுவது, நைவேத்திய பிரசாதங்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நெய், வெண்ணெய் போன்ற பொருட்களை வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆவின் நிறுவனம் மூலமாக மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,”