qகெலாட்-பைலட் இணைந்த கரங்கள்: அடுத்து என்ன?

Published On:

| By Balaji

ஒரு மாதத்துக்கும் மேலாக நிலவிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கான நெருக்கடி நேற்று (ஆகஸ்டு 13) முறைப்படி முடிவுக்கு வந்தது. அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டும், ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளால் நீக்கப்பட்ட முன்னாள் துணை முதல்வரான சச்சின் பைலட்டும் ஜெய்ப்பூரில் சந்தித்துக்கொண்டனர்.

சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்கள் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக திரண்டனர். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கூட்டத்தை இரு முறை அவர்கள் புறக்கணித்தனர். அதனால், அவர்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர். இதையடுத்து பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பாஜக ஆளும் ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாதுகாக்கப்பட்டனர். இதற்கிடையில் சட்டமன்றத்தைக் கூட்டி தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று முதல்வர் அனுப்பிய முன்மொழிவை ராஜஸ்தான் ஆளுநர் மூன்று முறை நிராகரித்தார். பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் கெலாட் பக்கம் சாய்ந்துகொண்டிருந்த நிலையில் சட்டமன்றத்தில் காங்கிரஸ் தன் பெரும்பான்மையை நிரூபித்துவிடக் கூடாது என்பதற்காக பாஜகதான் ஆளுநர் மூலம் அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி பிரியங்கா காந்தி மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளால் சச்சின் பைலட் மீண்டும் காங்கிரசுக்கே திரும்பினார். இதன் அடுத்த கட்டமாக ஆகஸ்டு 13 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முதல்வர் அசோக் கெலாட் இல்லத்துக்கு சென்றார் பைலட். அங்கே பைலட்டை கெலாட் வரவேற்றார், இதன் மூலம் ஒரு மாத காலத்துக்கும் மேலாக ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கான நெருக்கடி பெரும்பாலும் தீர்ந்துவிட்டதாக கருதப்படுகிறது. இதையடுத்து பைலட், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கட்சி ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்ய காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் பைலட்டுக்கு மீண்டும் துணை முதல்வர், காங்கிரஸ் தலைவர் பதவிகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

பைலட் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், “ இந்த வெற்றி, உண்மையில், ராஜஸ்தான் மாநில குடிமக்களின் வெற்றி. குடிமக்கள் அனைவரும் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்கு இந்த ஒரு மாதமாக வராததை நினைத்து கவலைப்படவில்லை. ‘நாங்கள் தேர்ந்தெடுத்த அரசு நிலைப்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்கு வராமல் இருந்தால் கூட பரவாயில்லை. அரசாங்கம் வெல்ல வேண்டும். அதன் பின்னர் நீங்கள் தொகுதிக்கு வாருங்கள்’ என்று மக்கள் கூறினார்கள். எனவே இது மாநில குடிமக்களின் வெற்றியாகும். நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை ஒரு மாதத்துக்கும் மேலாக ஒன்றாக தங்க வைத்து இந்த ஆட்சியைக் காப்பாற்றியிருக்கிறோம். இந்தியாவின் வரலாற்றில் இதுபோல் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. மறந்து, மன்னித்து தேசத்தின் நலனுக்காக முன்னேற வேண்டிய நேரம் இது” என்றார் கெலாட் .

முன்னதாக, ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான முடிவெடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸோ சட்டமன்றத்தில் தான் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

இன்று சட்டமன்றம் தொடங்கும் நிலையில் கெலாட்-பைலட் ஒன்றாக சேர்ந்திருப்பது ராஜஸ்தானில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share