ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் வென்றது. அதைத்தொடர்ந்து நடந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிலிருந்து விலகி தனித்து போட்டியிட்டது. இந்நிலையில், 2026 தேர்தலில், கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என்ற முனைப்போடு ராமதாஸ் கட்சியினருடன் கூட்டம் நடத்தி வருகிறார்.
[இதில், கடந்த டிசம்பர் 12ஆம் தேதி சேலத்தில் பாமகவின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், கூட்டணி என்றாலே காலை வாருவதுதான் என்று அதிமுகவைக் கடுமையாகச் சாடி பேசியிருந்தார்.](https://minnambalam.com/politics/2021/12/13/12/allainace-not-workout-ramadoss-pmk-attack-admk)
கூட்டணி என்று சொன்னால் இப்போது அதர்மமாகிவிட்டது. 23 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் குறைந்தது 20 தொகுதிகளில் அல்லது குறைந்தபட்சம் 15 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நாம் கூட்டணி தர்மத்தைப் பிற கட்சிகள் மீறியதால் 5 தொகுதியில் தான் வென்றோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 15) சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், கூட்டணி துரோகம் செய்ததால் குறைந்த அளவில் வெற்றி பெற்றோம் என ராமதாஸ் கூறுகிறாரே எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “என்ன துரோகம் செய்தோம் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்போதுதான் பதில் சொல்ல முடியும். மக்கள்தான் ஓட்டுப் போட வேண்டும். மற்றவர்கள் யாரும் ஓட்டுப் போட முடியாது. கூட்டணியில் இருந்து விலகுவதாகச் சொல்லிவிட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லை என்று விலகிவிட்டார்கள். தேர்தல் வரும்போது எல்லாம் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை” என்று விமர்சித்தார்.
**-பிரியா**
�,