ரஜினியுடனான சந்திப்பு குறித்து மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மார்ச் 5ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அதில், கட்சி ஆரம்பிப்பது, தேர்தலை சந்திப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் இன்று (மார்ச் 10) காலை குடும்பத்தினருடன் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் வரை இந்த சந்திப்பு நீண்டது.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “எனது பேரன் சேஷசாயியின் பிறந்தநாளையொட்டி ரஜினிகாந்தை சந்தித்து குடும்பத்துடன் வாழ்த்து பெற்றேன். ஆசிர்வாதம் வாங்குவதற்காகத்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது” என்று தெரிவித்தார்.
அரசியல் பேசப்பட்டதா என்ற கேள்விக்கு, “ரஜினியுடன் அரசியல் பேசாமல் எப்படி இருக்க முடியும். இந்தியாவில், தமிழகத்தில் தற்போது நிலவும் பொதுவான அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்தோம். மற்றபடி அவர் என்னிடம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை. நான் எந்த ஆலோசனையும் சொல்லவில்லை. உங்களிடம் சொல்லும் அளவுக்கு அவரிடம் எதுவும் விவாதிக்கவில்லை. அப்படி இருந்தால் உங்களிடம் சொல்லிவிடுவேன்” என்று பதிலளித்தார்.
**எழில்**
�,