ராஜினாமா செய்: நகர செயலாளருக்கு நெருக்கடி தருகிறாரா அமைச்சர் மகன்?

Published On:

| By Balaji

அமைச்சர்களின் மகன்கள் ஆட்சியிலும், கட்சியிலும் தலையிடுகிறார்கள் என்ற புகார்கள் திமுகவில் தற்போது அதிகமாகி வருகிறது. அந்த வகையில் லேட்டஸ்டாக சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பவர் கைத்தறித் துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியின் மகனான வினோத் காந்தி.

ராணிப்பேட்டை மாவட்டமாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டம் முன்பு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்துக்குள் இருந்தது. அப்போதில் இருந்தே துரைமுருகனின் ஆதிக்கத்துக்குள் இருந்த இந்த மாவட்டத்தில் வேறு யாரும் தலையெடுக்க முடியாத நிலை இருந்தது. அந்த நிலையில் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ராணிப்பேட்டை காந்தி அதன் காரணமாகவே 96 தேர்தலில் இருந்து 2021 தேர்தல் வரை தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றிபெற்றார். ஆனபோதும் அவரால் 2021 இல்தான் அமைச்சராக முடிந்தது. துரைமுருகனை மீறி அந்த வட்டாரத்தில் இருந்து காந்தியால் அமைச்சராக முடியவில்லை.

இப்படி போராடிப் போராடி அமைச்சராகிவிட்ட ராணிப்பேட்டை காந்தி கடந்தகாலத்தை மறந்து தானும் இன்னொரு துரைமுருகன் போலவே மகன் மூலம் மாவட்டத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று புகார் வாசிக்கிறார்கள் திமுகவினர்.

அவர்களிடம் பேசினோம்.

“வாலாஜா திமுகவின் நகர செயலாளராக இருப்பவர் வாலாஜா புகழேந்தி. 40 வருடங்களுக்கும் மேலாக தீவிர திமுக காரர். நல்ல பேச்சாளர். ராணிப்பேட்டை காந்திக்கு கடந்த ஆறு தேர்தல்களிலும் தீவிரமாக களப் பணியாற்றியவர். 7 வருடங்களாக இப்பதவியில் இருக்கும் புகழேந்தி கடந்த இரண்டு உள்கட்சித் தேர்தல்களில் ராணிப்பேட்டை காந்தியின் ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடித்து கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீப மாதங்களாக இவர் அமைச்சரது மகன் கட்சி விஷயங்களில் அனாவசியமாக தலையிடுவதை எதிர்த்தவர். அண்மையில் வாலாஜா புகழேந்தியின் சித்தப்பா காலமாகிவிட்டார். அதற்கு துக்கம் கேட்பதற்காக தான் வராமல் தன்னுடைய மகன் வினோத் காந்தியை அனுப்பி வைத்திருக்கிறார் காந்தி. ஆனால் புகழேந்தியோ, ‘நீங்க மாவட்டச் செயலாளர். துக்கம் கேட்க நீங்க வர்றதா இருந்தா வாங்க. இதுக்கெல்லாம் உங்க மகனை அனுப்பாதீங்க’ என்று சொல்லிவிட்டார். இப்படி பல சந்தர்ப்பங்களில் காந்தியோடு மோத ஆரம்பித்தார் புகழேந்தி.

இந்நிலையில்தான் இவரை நகரச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குமாறு நகர அவைத் தலைவர் தில்லை, மாவட்ட பிரதிநிதிகள் மோகன், இர்பான் ,நகர பொருளாளர் சசிகுமார், துணைச் செயலாளர்கள் குமார், நந்தகுமார் ஆகியோரிடம் கடந்த வாரம் கையெழுத்து பெற்றிருக்கிறார்கள் மாவட்ட திமுகவில். இதுபற்றி வாலாஜா புகழேந்தி மாவட்டச் செயலாளரிடமும், அவரது மகனிடம் சில முறை பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் நவம்பர் 13 ஆம் தேதி பிற்பகல் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான காந்தியின் மகன் வினோத் காந்தி வாலாஜா நகர செயலாளர் புகழேந்திக்கு போன் செய்து மாவட்ட அலுவலகத்துக்கு வருமாறு கூப்பிட்டிருக்கிறார். இவரும் ராணிப்பேட்டை மாவட்ட அலுவலகத்துக்குச் சென்றார்.

‘உங்களை நகர செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கச் சொல்லி நகர நிர்வாகிகள் எல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் நீண்ட கால கட்சிக்காரர். உங்களுக்கு கௌரவக் குறைச்சல் வேண்டாம். நீங்களே ராஜினாமா செய்துடுங்க. மாவட்ட அளவில் அணிகளில் உங்களுக்கு நல்ல பொறுப்பு கொடுக்க ஏற்பாடு பண்ணுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு வாலாஜா புகழேந்தி ராஜினாமா கடிதம் மட்டுமில்ல மன்னிப்பு கடிதம் கூட கொடுக்கத் தயார். ஆனால் என்ன தப்பு பண்ணினேன்னு சொல்லுங்க’ என்று கூறியிருக்கிறார். ஆனால் அமைச்சர் மகன் , ‘அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. நிர்வாகிகள் உங்களை விரும்பலை அவ்வளவுதான் என்று பதில் சொல்லியிருக்கிறார்.

வரும் நகராட்சித் தேர்தலில் வாலாஜா புகழேந்தி நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்திருக்கிறார். அதை அமைச்சர் தரப்பு விரும்பவில்லை. அடுத்து வரும் உட்கட்சித் தேர்தலிலும் புகழேந்தியே வெற்றிபெற அதிக வாய்ப்பிருக்கிறது. எனவேதான் இப்படி நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கி அவரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தனது மகன் மூலமாக இறங்கியிருக்கிறார் அமைச்சர். மூத்த கட்சிக்காரரை உண்மையான கட்சிக்காரை இப்படி ட்ரீட் பண்ணுவது நன்றாக இல்லை. இதுகுறித்து பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கும் வாலாஜா திமுகவில் இருந்து தகவல்கள் சென்றுள்ளன” என்கிறார்கள்.

நாம் இதுகுறித்து வாலாஜா நகர செயலாளராக இருக்கும் புகழேந்தியிடம் பேசினோம். “இது எங்கள் உட்கட்சி விவகாரம். இதுபற்றி நான் ஊடகங்களிடம் பேசக் கூடாது” என்று முடித்துக் கொண்டார்.

இந்த சர்ச்சை குறித்து நாம் அமைச்சரின் மகனும் திமுக மாநில சுற்றுச் சூழல் அணி துணைச் செயலாளருமான வினோத் காந்தியிடம் பேசினோம்.

“அவர் எனக்கு இருமுறை போன் செய்து என்னை சந்திக்க வேண்டும் என்று சொன்னார். அதனால் அவரை கூப்பிட்டு பேசினேன் .அதைத் தவிர வேறு எதுவும் நான் செய்யவில்லை. கட்சி அமைப்பு விஷயங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதெல்லாம் மாவட்டச் செயலாளர்தான் பார்க்க வேண்டும்”என்று கூறினார் வினோத் காந்தி.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share