ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஏப்ரல் 14) ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்வில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. ஆளுநர் அளித்த விருந்தில் முதல்வர் கலந்து கொள்ளாதது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியான நிலையில் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீட் மசோதா குறித்தும் தேநீர் விருந்தில் பங்கேற்காதது குறித்தும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு தொடர்பான மசோதாவிற்கு விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக இந்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ள முதல்வர், “தமிழக சட்டப்பேரவையில் இப்பொருள் குறித்து இரு முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட போதும், ஆளுநரை நேரில் சந்தித்து இது குறித்து நான் பேசிய பின்னரும் நீட் தேர்வு மசோதாவானது ஆளுநரால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படாதது மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர், “நீட் விலக்கு மசோதா தொடர்பாக, நான் நேரில் சந்தித்து வலியுறுத்திய போது இம்மசோதா இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினீர்கள். சட்டப்பேரவையில் இருமுறை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டும், நேரில் வலியுறுத்தியும் எந்தவித முன்னேற்றமும் காணப்படாததால், ஏப்ரல் 14ஆம் தேதி இரு அமைச்சர்கள் இக்கோரிக்கையினை மீண்டும் உங்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
அப்போதும் கூட உங்கள் தரப்பில் இருந்து சாதகமான எந்த ஒரு உத்தரவாதமும் தரப்படவில்லை என்று அமைச்சர்கள் என்னிடம் தெரிவித்தனர். இந்த சூழலில் ஆளுநர் மாளிகையில் நீங்கள் நடத்தும் தேநீர் விருந்து விழாவில் கலந்து கொள்வது சரியானதாக இருக்காது என்று கருதினோம். அதாவது எங்கள் சமூகம் மற்றும் சட்டப் பேரவையின் ஒட்டுமொத்த கருத்துக்கு உரிய மரியாதை தரப்பட வில்லை என்கிற போது நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்.
எங்கள் கோரிக்கையில் உள்ள நேர்மையையும் நியாயத்தையும் நீங்கள் உணர்வீர்கள் என்று இப்போது கூட நான் நம்புகிறேன். எந்த ஒரு கால தாமதமும் இல்லாமல் நீட் மசோதாவை இந்திய அரசுக்கு அனுப்பி அரசியல் சாசன கடமைகளை நிறைவேற்றி தருவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
நாம் இருவரும் அரசியல் சாசனத்தின் கடமைகளை நேர்மையாக நிறைவேற்றும்போது தமிழகம் பல்வேறு முன்னேற்றங்களை பெறும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். அதோடு நமது உறவு நல்லுறவும் இதயபூர்வமானதாகவும் மக்கள் நலனை பேணுவதாகவும் தொடரும் என்றும் உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே…. ஆளுநர் மாளிகையில் திறக்கப்பட்ட பாரதியாரின் சிலைக்கு கீழே அமைக்கப்பட்டு உள்ள கல்வெட்டில், திறந்து வைப்பவர் ஆளுநர், முன்னிலை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் என பொறிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அதிகாரிகள் வட்டாரங்களில் விசாரித்தபோது, “ஆளுநர் மாளிகையில் இருந்து முதல்வரிடம் கேட்காமல் முதல்வரின் ஒப்புதலைப் பெறாமல் கல்வெட்டில் முதல்வர் பெயரை பொறிக்க வாய்ப்பு இல்லை. ஆளுநர் மாளிகைக்கும் முதல்வர் அலுவலகத்துக்கும் இடையில் பரிமாறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தான் கல்வெட்டில் முதல்வர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.
இதன்படி பார்த்தால் முதல்வர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.
அதன் பிறகு கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் முதல்வர் கலந்து கொள்வது மறுபரிசீலனை செய்யப்பட்டு இந்த தகவலை ஆளுநரிடம் தெரிவிப்பதற்காகவே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று காலை ஆளுநரை சந்தித்து முதல்வர் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள இயலாத நிலையை தெரிவித்திருக்கிறார்கள்.
அதற்குப் பிறகுதான் முதல்வர் நேற்று இரவு ஆளுநருக்கு தான் வர முடியாத சூழலை விளக்கி கடிதம் எழுதியிருக்கிறார்.
ஒருவேளை ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்ட கல்வெட்டில் முதல்வர் பெயர் அவரது ஒப்புதலோடு பொறிக்கப்பட வில்லை என்றால் அதுவும் சர்ச்சைக்குரியதே” என்கிறார்கள்.
நேற்று ஏப்ரல் 14-ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆளுநர் முதல்வரை மரபுரீதியாக அழைத்துள்ளார். தனிப்பட்ட ஸ்டாலினை ஆளுநர் அழைக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினை தான் அழைத்திருக்கிறார். நான்கு நாட்களுக்கு முன்பே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு விட்ட நிலையில் இன்றுதான் விழிப்பு வந்ததா?” என்றும் கேள்வியைக் கேட்டுள்ளார்.
**வேந்தன், பிரியா**