wதமிழகத்தில் ஊரடங்கா? : தலைமை செயலாளர் ஆலோசனை!

Published On:

| By Balaji

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பாக தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் 17ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் எவ்வாறு நடவடிக்கைகள் எடுத்தால், தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தொடர்ந்து தலைமை செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதுபோன்று, கொரோனா முதல் அலையின்போது போடப்பட்டது போல் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதனால், தமிழகத்தில் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு போடுவதா அல்லது மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு போடுவதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தினால் பொருளாதாரமும் பாதிப்படையும் என்பதால் அதிகாரிகள் குழப்பத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து முடிவெடுக்க, தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால், தலைமை செயலாளர், நேற்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில், டிஜிபி ஜே.கே.திரிபாதி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலர் செந்தில் குமார், ஆளுநரின் செயலர் ஆனந்த ராவ் வி.பாட்டீல் ஆகியோரும் பங்கேற்றனர்.

அப்போது, அரசின் நடவடிக்கைகளையும், முன்கள பணியாளர்களின் சேவைகளையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைவசதி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்களை ஏற்படுத்த சரியான திட்டம் வகுக்க வேண்டும். ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிப்பதுடன், மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று தமிழக ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இன்று(ஏப்ரல் 29) தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார். தொற்று பாதிப்பு அதிகமுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நெல்லை, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, மே 1, 2 ஆகிய தேதிகளில் ஊரடங்கு விதிக்கப்படுவது குறித்து முடிவு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்புகள் இன்று மாலை அல்லது நாளைக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share