‘கவலைக்குரிய விஷயம்’: மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம்!

Published On:

| By Balaji

ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் 58 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதாவது தினசரி பாதிப்பு 6.43 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மறுபக்கம் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2630 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797 பேரும், டெல்லியில் 465 பேரும், ராஜஸ்தானில் 236 பேரும், கேரளாவில் 234 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஆர்த்தி அஹுஜா, தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பீகார் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனா பரிசோதனை செய்வது குறைந்திருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

பெரும்பாலான நாடுகளில் அதிகளவில் தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால், நிலைமை மோசமடைவதை தடுக்க தொடர் முயற்சிகளும் விழிப்புணர்வும் தேவை.

ஒமிக்ரானின் கணிக்க முடியாத, அதிகமாக பரவக்கூடிய தன்மையையும் மற்றும் அறிகுறியற்ற பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும் கருத்தில் கொண்டு, ஆரம்ப நாட்களிலேயே பரிசோதனையை அதிகரிப்பது, பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்ய உதவியாக இருக்கும். போதுமான பரிசோதனை இல்லாமல் போனால், தொற்றின் உண்மையான பரவல் விகிதத்தை அறிவது கடினமாக இருக்கும். கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், சோதனை வசதிகள் போன்றவை போதுமான அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிசோதனை ஆய்வகங்கள், உபகரணங்கள், ஊழியர்களையும் தயாராக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தினமும் ஒரு லட்சம் அல்லது ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share