குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்களுக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், வடகிழக்கு மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இலங்கைத் தமிழர்களுக்கான குடியுரிமை குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்றும் நாடு முழுவதும் 10 நாட்களைக் கடந்து தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியிலும் சட்டத்தைத் திரும்பப் பெற மறுத்த மத்திய அரசு, போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், மக்களையும் மாணவர்களையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர்களுடன் நேற்று (டிசம்பர் 21) ஆலோசனை மேற்கொண்டார். அதில், எதிர்க்கட்சிகளுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜக சார்பில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த 10 நாட்களுக்கு நாடு முழுவதும் மூன்று கோடி குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து இந்தச் சட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கவுள்ளோம். சட்டத்தை விளக்கி 250க்கும் மேற்பட்ட இடங்களில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தவுள்ளோம். 1,000 இடங்களில் பேரணி நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பின் மூலம் குடியுரிமைச் சட்டத்தின் உண்மைகளையும் எதிர்க்கட்சிகளின் பொய்களையும் மக்களிடம் கொண்டு செல்வோம்” என்று தெரிவித்தார்.
�,