ஹிஜாப்: சர்ச்சையை கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்!

politics

ஹிஜாப் விவகாரம் குறித்து பாஜக சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஆரம்பித்த ஹிஜாப் விவகாரம் தொடர்ந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் 14ஆம் தேதி 1-10 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று (பிப்ரவரி 16) 10,11 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்குப் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் உயர் நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். இது மீண்டும் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
சித்ரதுர்கா, குந்தாப்புரா, சிவமொக்கா, உடுப்பி, விஜயபுரா உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பல முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தனர். இவர்களைத் தடுத்து நிறுத்திய கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் ஹிஜாப்பை அகற்றினால் மட்டுமே உள்ளே அனுமதி என்று சொன்னதால், போராட்டத்தில் இறங்கினர். சில இடங்களில் வகுப்புகளைப் புறக்கணித்துச் சென்றாலும், பெரும்பாலான இடங்களில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து முஸ்லிம் மாணவிகள் கூறுகையில், “காரிடாரிலும், கேன்டீனிலும் ஹிஜாப் அணியலாம். ஆனால், வகுப்புகளில் அணியக் கூடாது என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. ஹிஜாப்பைக் கழற்றிவிட்டு வகுப்புகளில் உட்கார நாங்கள் தயாராக இல்லை. தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம். இத்தனை வருடங்களாக ஹிஜாப் அணிந்து வர அனுமதித்தவர்கள் இன்றைக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்?
ஹிஜாப் என்பது எங்களின் பெருமை, ஒழுக்கம். அதை நீக்கிவிட்டு வகுப்பறைகளில் உட்கார சொல்கிறார்கள். ஒருவேளை எங்கள் தலையைப் பார்த்து பாடம் நடத்தினால்தான் ஆசிரியர்களால் நன்றாக பாடங்களை கற்பிக்க முடியுமோ? முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஏழை மக்களைக் குறிவைத்து, இன்னும் பின்னுக்குத் தள்ள விரும்புகிறார்கள். எங்களுக்கு முடிவுகட்ட விரும்புகிறார்கள்.
கல்விக்கு இணையாக ஹிஜாப்பை மதிக்கிறோம். தற்போது கல்வியா? ஹிஜாப்பா? என்றால், ஹிஜாப்தான் முக்கியம். ஹிஜாப் ஒரு புனித ஆடை. புனிதத்தைக் காக்க கல்வியைத் துறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறுகின்றனர்.
ஏற்கனவே ஹிஜாப் விவகாரம் தேசிய அளவில் சர்ச்சைகளையும், விவாதங்களையும் உருவாக்கியுள்ள நிலையில், பாஜக சுப்பிரமணியன் சுவாமி தன் பங்குக்கு பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில், “முஸ்லிம் மாணவிகள் ‘முதலில் ஹிஜாப், பிறகு படிப்பு’ என்று வகுப்புகளைப் புறக்கணிக்கும் ஹிஜாப் சர்ச்சையைப் பார்க்கும்போது, அவர்களின் தாத்தாக்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதை விட இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த ட்வீட்டுக்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த நான்கைந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் மட்டுமே, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று கர்நாடக மக்கள் நம்புகின்றனர்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *