அதிமுக கூட்டணி இல்லையென்றால்: கமலாலயத்தில் நடந்த காரசார விவாதம்!

politics

எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜனவரி 28) அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பொதுச் செயலாளர்கள், அமைப்பு பொதுச்செயலாளர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மற்றும் மாவட்ட தலைவர்கள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காலை 10.30 மணிவாக்கில் தொடங்கிய இந்த கூட்டம் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து நடைபெற்று மாலை வரை நடந்தது.

இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன, அதிமுகவோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்பதால் பாஜக கட்சிக்கு ஏற்படும் பலன்கள் என்ன, நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்று பாஜக மாவட்ட தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அப்போது கணிசமான மாவட்ட தலைவர்கள், கட்சியை வளர்க்க தனித்து நிற்கலாம்”என்று குரல் எழுப்பி இருக்கிறார்கள். அதேநேரம் எதார்த்தத்தை புரிந்துகொண்டு அதிமுக கூட்டணியில் இருப்பது தான் இப்போதைக்கு சரியான விஷயம் என்றும் சிலர் கூறினர்.

பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அதிமுக கூட்டணி தொடர ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

கோவை, நாகர்கோவில் மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் மேயர் பதவியை பாஜகவுக்கு பெற வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில்…”தற்போது அதிமுக கூட்டணி இல்லை என்றால் என்ன செய்யலாம்” என்ற கேள்வியை அண்ணாமலை எழுப்பியது சீனியர் தலைவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு… முடிவெடுக்கும் அதிகாரத்தை பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஒப்படைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் பொன் ராதாகிருஷ்ணன்.

” பாஜகவில் சென்னை உட்பட 4 மாநகராட்சிகளுக்கான விருப்பமனு நேர்காணல் நிறைவுற்று விட்டது.

நாளை மறுநாளுக்குள் அனைத்து மாவட்டத்திலும் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அண்ணாமலை விரைவில் வேட்பாளர்களை அறிவிப்பார் , 31 ம் தேதிக்குபின் வேட்புமனு தாக்கல் தொடங்கும்.

அனைத்து மாவட்ட தலைமை அலுவலகத்திலும் காணொலி மூலம் அண்ணாமலை கருத்துகள் வழங்கியுள்ளார்.

பாஜகவின் தேர்தல் முன் தயாரிப்புகள் ஏறக்குறைய நிறைவு பெற்றன. இரண்டு நாளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.

கூட்டணி தொடர்பாக இன்று மாவட்ட தலைவர்களுடன் முழுமையாக பேசினோம். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க முழு அதிகாரம் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசப்பட்ட எல்லா விஷயத்தையும் இங்கு பேச நான் தயார் இல்லை.

அதிமுக கூட்டணியுடனான பேச்சுவார்த்தை சுமுகம் , சுமுகம் இல்லை என எந்த கருத்தையும் நான் கூறவில்லை” என்று கூட்டணி பற்றி பட்டும் படாமல் தெரிவித்தார் பொன் ராதாகிருஷ்ணன்.

ஜனவரி 24ஆம் தேதி நடந்த பாஜகவின் மையக் குழுக் கூட்டத்தில் அதிமுக மீதான அதிருப்தியை மையக் குழு தலைவர்கள் வெளியிட்ட நிலையில்… அடுத்த நாளான 25 ஆம் தேதி தான் வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக தலைவர்களை கடுமையான வார்த்தையில் விமர்சனம் செய்தார் பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன்.

அப்போதே பாஜக நயினார் நாகேந்திரனை விட்டு ஆழம் பார்க்கிறது என்றெல்லாம் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த அண்ணாமலை தான்… நேற்று நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக கூட்டணி இல்லை என்றால் நாம் எப்படி செயல்படலாம் என்று மாவட்ட தலைவர்களிடம் கருத்து கேட்டுள்ளார். நேற்றைய கூட்டத்துக்கு பிறகு அதிமுக பாஜக உறவில் சிக்கல் தொடர்வது தெரிகிறது.

**வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *