டெல்லி வன்முறை தொடர்பாக மக்களவையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டத்தில், பிப்ரவரி 24ஆம் தேதி வன்முறை வெடித்தது. தொடர்ச்சியாக நடந்த இந்த வன்முறையில் 52 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய மார்ச் 2ஆம் தேதி முதல் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக நேற்று (மார்ச் 11) பிற்பகல் விரிவாக விவாதம் நடைபெற்றது.
காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “டெல்லி பற்றி எரிந்துகொண்டிருந்தபோது உள் துறை அமைச்சர் அமித் ஷா என்ன செய்து கொண்டிருந்தார்? ரோம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, டெல்லி பற்றி எரிந்தபோது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார்” என்று குற்றம்சாட்டினார்.
திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், “ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்து ஜேஎன்யூவில் நடந்த கலவரத்துக்கு முழுக் காரணமும் ஏபிவிபி அமைப்புதான்” என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, “டெல்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்களின் வன்முறை பேச்சுகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது. வன்முறையைத் தூண்டிய பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதியே உத்தரவிட்டிருந்த நிலையில், அவர்கள் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேரில் சந்திக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். டெல்லி வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விவாதத்தில் பேசிய பாஜக எம்.பி மீனாட்சி லேகி, “சிறுபான்மையினரின் வாக்கு வங்கியைக் குறிவைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. டெல்லி வன்முறை 36 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது” என்று விளக்கம் அளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் உரையாற்றி முடித்த பிறகு மாலை 6.45 மணியளவில் டெல்லி வன்முறை தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா விரிவாக விளக்கம் அளித்தார்.
“டெல்லி கலவரத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். துக்கத்தில் உள்ள அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பிப்ரவரி 25ஆம் தேதிக்குப் பிறகு கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தக் கலவரங்களை அரசியலாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்று குற்றம்சாட்டிய அமித் ஷா,
“டெல்லி காவல் துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கலவரம் நேரத்தில் காவல் துறையினர் களத்தில்தான் இருந்தனர். டெல்லி காவல் துறையினர் 36 மணி நேரத்திற்குள் கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். கலவரம் மற்ற பகுதிகளில் பரவாமல் கட்டுப்படுத்தியதற்காக டெல்லி காவல் துறையைப் பாராட்டுகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அகமதாபாத் வருகை முன்பே திட்டமிடப்பட்டது. அந்த நிகழ்ச்சி எனது தொகுதியில்தான் நடந்தது. அதில் நான் கலந்துகொள்வதும் முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. அடுத்த நாள் அமெரிக்க அதிபர் டெல்லிக்கும் வருகை தந்தார். ஆனால், அமெரிக்க அதிபரின் எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்ளவில்லை. முழு நேரமும் நான் காவல் துறை அதிகாரிகளுடன் அமர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தேன். தேசியப் பாதுகாப்புப் படையை மட்டும் கலவரம் நடந்த பகுதிக்குச் செல்லக் கூறினேன். எனது பாதுகாப்புக்காகக் காவல் துறையின் பணி திசை திருப்பப்படலாம் என்பதால் நான் அங்கு செல்லவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
வன்முறை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட அமித் ஷா, “27ஆம் தேதி தொடங்கி இன்று வரை ஒட்டுமொத்தமாக 700 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2,647 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுதச் சட்டத்தின் கீழ் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 153 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வளவு குறுகிய காலத்தில் பெரிய அளவில் கலவரம் பரவுவது என்பது சதி நடைபெறாமல் சாத்தியமில்லை. சதித் திட்டம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறோம். வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்துக்கு நிதியளித்த மூன்று பேரைக் கைது செய்துள்ளோம்.
கலவரங்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். 526 பேர் காயமடைந்துள்ளனர். 351 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது, 152 வீடுகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. மசூதிகள், கோயில்கள் என பாகுபாடில்லாமல் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி கலவரங்களில் யார் யார் ஈடுபட்டார்களோ அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து அதன் மூலம் டெல்லி கலவரங்களில் உடைமைகளை இழந்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
பிப்ரவரி 22ஆம் தேதி 60 சமூக ஊடக கணக்குகள் தொடங்கப்பட்டு பிப்ரவரி 26ஆம் தேதி அவை நீக்கப்பட்டுள்ளன. இதன் பின்னால் இருப்பவர்களைக் காவல் துறையினர் கண்டுபிடிப்பார்கள். சமூக ஊடகங்கள் வெறுப்பைத் தூண்டுவதற்குப் பயன்பட்டன. இந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறை முழுமையாக விசாரணை நடத்தும் என அவைக்கு நான் உறுதியாகச் சொல்கிறேன்.
பிப்ரவரி 25ஆம் தேதி முதல் 650க்கும் மேற்பட்ட சமாதானக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. வன்முறையை ஏற்படுத்தியவர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. அப்பாவி நபர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “டெல்லி வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு, இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் கலவரத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. கலவரங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என நான் நம்புகிறேன். குற்றவாளிகள் எந்த சாதி, மதம், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களைத் தப்பிக்க விட மாட்டோம் எனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்றும் அவையில் விளக்கம் அளித்தார்.
அமித் ஷா பேசிக்கொண்டிருக்கும்போது அதைப் புறக்கணித்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
**-எழில்**
�,