எடப்பாடி, பன்னீருக்கு அமித் ஷா நடத்திய தேர்தல் வகுப்பு!

Published On:

| By Balaji

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (பிப்ரவரி 28) இரவு விழுப்புரம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியவர், கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் இருந்து இரவு ஒரு மணிக்கு டெல்லி புறப்பட்டார்.

பத்து மணி வாக்கில் ஹோட்டலுக்கு அமித் ஷா திரும்பும் முன்னரே அங்கே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காத்திருந்தனர். அவர்களுடன் சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனைக்குபின் அமித் ஷா டெல்லி புறப்பட்டார்.

இதுபற்றி, நள்ளிரவில் [அமித் ஷா ஒதுக்கிய இரண்டு மணி நேரம்- நடந்தது என்ன?](https://minnambalam.com/politics/2021/03/01/15/amitsha-finalase-admk-bjp-seat-sharing-chennai-midnight)என்ற தலைப்பில் இன்று காலை பதிப்பில் டிஜிட்டல் திண்ணை பகுதியில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில், “ஹோட்டலில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் அமித் ஷா தங்கியிருந்தார். அதன் பிறகே டெல்லி புறப்பட்டார். எனவே அமித் ஷா தொகுதிப் பங்கீட்டுக்காக மட்டுமே இவ்வளவு நேரம் பேசியிருப்பாரா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஏற்கனவே தேமுதிக தங்களது தொகுதிப் பிர்ச்சினை பற்றி பாஜக கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு போயிருக்கிறது. அதையும் தாண்டி அதிமுகவின் கட்சி ரீதியான சில பிரச்சினைகளையும் அமித் ஷா பேசியிருக்கலாம் என்றும் அதிமுக வட்டாரத்திலேயே சொல்கிறார்கள். ஒரு முடிவோடுதான் அமித் ஷா நள்ளிரவு சென்னையை விட்டுப் புறப்பட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படியே நேற்று இரவு அமித் ஷா சென்னை ஹோட்டலில் என்ன செய்தார் என்பது பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பாஜக வட்டாரங்களில் விசாரித்தோம்.

“அமித் ஷா வர இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து முதல் 15 நிமிடங்கள்தான் விவாதித்தார். எங்களுக்கு 25 முதல் 30 வரை வேண்டும் என்று அவர் சொல்லிவிட்டு அடுத்த கட்டமாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக,திமுக கூட்டணிகளின் பலம் குறித்தே நீண்ட நேரம் விவாதித்துள்ளார்.

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறும் என்று மத்திய உள்துறைக்கு கிடைத்த தொகுதி வாரியான அறிக்கை அமித் ஷாவின் கையில் இருந்தது. மேலும் அதிமுக நடத்திய ஆய்வு முடிவுகளையும் எடுத்துக்கொண்டு வரும்படி அமித் ஷா எடப்பாடிக்கு ஏற்கனவே கட்டளையிட்டிருந்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ் சும் சில அறிக்கைகளை அமித் ஷாவிடம் கொடுத்தனர். ஆனால் தனக்குக் கிடைத்த தகவல்களின்படி திமுக அதிக தொகுதிகளில் வெற்றிபெறும் நிலையில் இருப்பதாகக் கூறிய அமித் ஷா இந்த நிலையை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் நாம் மாற்றியமைக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

234 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறும் தொகுதிகள், திமுக கூட்டணியோடு நெருக்கமாக மோதும் தொகுதிகள், வெற்றிவாய்ப்பு இல்லாத தொகுதிகள் என மூன்று வகைகளாகப் பிரித்து ஒரு பட்டியல் வைத்திருந்தார் அமித் ஷா. அந்தப் பட்டியலை இருவரிடமும் கொடுத்து, இதில் வெற்றிவாய்ப்பு இல்லாத தொகுதிகளிலும், இழுபறியான தொகுதிகளிலும் இன்னும் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் விவரித்தார் அமித் ஷா. அதிலும் வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளை எப்படியெல்லாம் நெக் டு நெக் பட்டியலுக்குக் கொண்டு செல்ல முடியும் என்று சில திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார் அமித்ஷா.

இதுமட்டுமல்ல… வெற்றிவாய்ப்புகளின் அடிப்படையில் பிரதமர் மோடி தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும், ரோடு ஷோ நடத்த வேண்டுமா, பொதுக்கூட்டங்கள் போதுமா என்பது பற்றியெல்லாம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் அமித் ஷா. மேலும் திமுகவில் தற்போது இருக்கும் முக்கிய பிரமுகர்களில் தொழிலதிபர்களாக இருப்பவர்கள் யார் யார், அவர்கள் வழியாக திமுகவுக்கு செல்லும் பொருளாதாரப் பரிவர்த்தனையை எப்படித் தடுப்பது என்பது குறித்தும் ஆலோசித்துள்ளார். ஆக இந்த இரு மணி நேர ஆலோசனையில் எடப்பாடிக்கும், பன்னீருக்கும் தேர்தல் வகுப்பே நடத்தியிருக்கிறார் அமித் ஷா.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுடனான பிரச்சினை பற்றியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தினகரன், ‘நமது பொது எதிரி திமுக. திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதே எங்கள் நோக்கம்’ என்று பேசிவருவது பற்றியும் தனக்குக் கிடைத்த தகவல்களையும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் கேட்டுள்ளார் அமித் ஷா” என்று விளக்கினார்கள்.

**-ஆரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share