அதிமுக மீது கைவைத்தால்… : மாஜி அமைச்சரின் எச்சரிக்கை!

politics

திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான வரியைக் குறைக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்தது. ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திலகர் திடலில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விஜயபாஸ்கர் பேசுகையில், அம்மா க்ளீனிக்குகள் மூடப்படுவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்த அவர், பொங்கல் பண்டிகைக்கு அதிமுக அரசு ரூ.2 ஆயிரம் கொடுத்தது. ஆனால் இந்த அரசு கொடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். மேலும், அதிமுகவினர் மக்கள் பிரதிநிதியாக உள்ள பகுதியில் அரசு எந்த திட்டத்தையும் கொடுப்பதில்லை. வீட்டுக்கான குடிநீர் இணைப்பாக இருந்தாலும் அதைக் கேட்பது அதிமுகவாக இருந்தால் கொடுக்க மறுக்கிறது திமுக அரசு. அதிமுக மக்கள் பிரதிநிதிகளைப் புறந்தள்ளி ஓரவஞ்சனை செய்கிறது. தற்போதைய சோதனைக் காலத்தை எதிர்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவோம்” என்றார்.

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், “எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு மாதிரியும், ஆட்சியில் இருக்கும் போது ஒரு மாதிரியும் பேசுகிறார்கள். இந்த இயக்கத்திலிருந்து எல்லா பதவிகளையும் அனுபவித்த ஒருவர், கோபாலபுரத்துக்குச் சரியாகக் கப்பம் கட்டும் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் திமுகவில் முக்கியமான பதவியில் இருக்கிறார். ஏன் அவர் முக்கியமான பதவியில் இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கடுமையாக விமர்சித்தார்.

ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்தான் திமுகவினர் கவனம் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்களை நினைக்க வைத்துவிட்டார்கள்” என்றார்.

மேலும் அவர், பொய் கேசுகளை போடுபவர்களுக்கு, வைத்த மொய்க்குப் பதில் அதிக மொய் வைப்போம். இதோடு மட்டுமில்லாமல், அதிமுகவின் தொண்டர்கள் மீது கை வைத்தால் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். கையை உடைப்பேன். ஒரு அடி கொடுத்தால், இரு அடி சேர்த்துக் கொடுப்பேன். இந்த கட்டப்பஞ்சாயத்து ஆட்சி சீக்கிரம் முடிவுக்கு வரும்” என்றார்.

நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவர் பேசுகையில், செந்தில் பாலாஜியால் தான் என் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. கிரிப்டோகரன்சி என்றால் என்வென்றே எனக்குத் தெரியாது. ஆனால் இதை வைத்து என்னை விமர்சிக்கிறார் செந்தில் பாலாஜி. இப்போது எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அவர் எதாவது முதலீடு செய்துவிட்டு இது தங்கமணிதான் என்று சொல்ல… இதற்காகத்தான் என் மீது வழக்குப் போட்டார்களா என தெரியவில்லை. மின்சாரத் துறையில் ஊழல் செய்து செந்தில் பாலாஜி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தாரா என தெரியவில்லை. எத்தனை சோதனைகளைக் கொடுத்தாலும் அதிமுகவினர் எதற்கும் அஞ்சமாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜுனன், ஏ.கே செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது “அதிமுகவைப் பழிவாங்காதே” என்று கோஷம் எழுப்பினர். இந்த அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லை எனவும் குறிப்பிட்டனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, “ஸ்மார்ட் சிட்டி பணிகளை எல்லாம் நிறுத்தி வைத்துள்ளார்கள். இதனை எல்லாம் செயல்படுத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேலைகளை மீண்டும் தொடங்க வேண்டும். எங்களைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்து மக்களைப் பழிவாங்குகிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ரெய்டு நடத்துகின்றனர். இன்றைய தினம் ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “தமிழகத்தில் எந்த ஆட்சியும் நிரந்தரமில்லை. நிச்சயம் அதிமுக ஆட்சிக்கு வரும். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சட்டையைக் கழற்றாமல் விட மாட்டோம். திருடர்களிடம் மாமூல் வாங்கி வீடு கட்டியவர்கள்தான் லஞ்ச ஒழிப்பு போலீசாராக இருக்கிறார்கள் ” என்று ஆவேசமாகப் பேசினார். தொடர்ந்து தமிழக டிஜிபி மற்றும் காவல் துறை அதிகாரிகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

கடலூர் வருவாய் மாவட்டத்தைக் கட்சி நிர்வாகத்திற்காகக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என பிரித்து நான்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்தது அதிமுக தலைமை. இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்துகொள்ளவில்லை. கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதால் ஆர்ப்பாட்டத்துக்கு வரவில்லை. மற்ற மூன்று மாவட்டச் செயலாளர்களான அருண்மொழித் தேவன், பாண்டியன், சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

**-பிரியா, வணங்காமுடி**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *