வேட்பாளர் தற்கொலை: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

Published On:

| By admin

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

வருகிற 19ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 36 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் என்பவரும் நேற்று முன்தினம்வரை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விஷ்ணு காஞ்சி காவல் துறையினர், ஜானகிராமனின் உறவினர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஜானகிராமன் தற்கொலையில் சந்தேகம் உள்ளது என்றுக் கூறி அவரின் பெற்றோரும், அதிமுக மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், மாநில அமைப்புச் செயலர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் தலைமையிலான அதிமுகவினரும் விஷ்ணு காஞ்சி காவல்நிலையம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் கூறுகையில், “காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜானகிராமன் தற்கொலை செய்துக் கொண்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதன்படி அவருடைய வீட்டிற்கு சென்றுபார்த்தபோது, அவர் தற்கொலை செய்துக் கொண்டது உண்மை என்று தெரிந்து கொண்டோம். தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், அதனால் என் குடும்பத்துக்கு பாதுகாப்பு இல்லை என்றும் நேற்று முன்தினம் ஜானகிராமன் நாங்கள் உள்பட எங்கள் இயக்கத்தை சார்ந்தவர்களிடம் கூறினார். இதுகுறித்து போலீஸிடம் புகார் அளிப்போம் என்று அவரை சமாதானம் செய்திருந்தோம். அதற்குள் அவர் தற்கொலை செய்துக் கொண்டார். அதனால், அவருடைய செல்போனை ஆய்வு செய்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளோம். திமுகவுக்கு தோல்வி பயம் வந்ததால், அதிமுக வேட்பாளர் நிற்கும் இடங்களில், அவர்களை விலைக்கு வாங்குவது அல்லது மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் திமுக வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் 36வதுவார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணைய விதிப்படி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் மரணமடைந்தால் அந்த குறிப்பிட்ட வார்டு தேர்தல் ஒத்தி வைக்கப்படும். அதன்படி, அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணமடைந்ததால் 36 வது வார்டுக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது. 36வது வார்டுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share