10.5 % இட ஒதுக்கீடு வாங்கிய பின்னணி: ராமதாஸ் கண்ணீர்!

Published On:

| By Balaji

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தான் பட்ட கஷ்டங்களை ஜூம் மீட்டிங்கில் பேசியிருக்கிறார்.

1987ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், வன்னியர் சமுதாயத்துக்கு உள் ஒதுக்கீடு கேட்டு ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தைக் கலைக்கத் தமிழக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21பேர் பலியானார்கள்.

34 வருடங்களுக்குப் பிறகு அதே அதிமுக ஆட்சியில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

10.5 சதவீத இட ஒதுக்கீடு எப்படி வாங்கினோம்? அதன் பின்னணியில் ஏற்பட்ட கஷ்டங்கள் ஆகியவை குறித்து, நேற்று (பிப்ரவரி 28)நடைபெற்ற ஜூம் மீட்டிங்கில் ராமதாஸ் உருக்கமாகப் பேசியுள்ளார்.

அதிமுக அமைச்சர்கள் கூட்டணி விஷயமாகப் பேசவந்தபோது, வன்னியர் சமுதாயத்துக்கு 20% சதவீத இட ஒதுக்கீடு கொடுங்கள் என்ற கோரிக்கையைத் தான் வைத்தோம். சட்டமன்றத்தில் அறிவிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் சட்டமன்றத்தை அமைதியாக முடிக்க நினைத்தார்கள். என்ன நடந்தது என்று கட்சித் தலைவர் ஜி.கே.மணி சொல்வார்” என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து பேசிய ஜி.கே.மணி, “அதிமுக தலைமையிலிருந்து பிப்ரவரி 26ஆம் தேதி, மாலை தொகுதி எண்ணிக்கையைப் பேசி முடிவுசெய்யலாம் என்றார்கள். தேர்தலுக்கு ஆயத்தமாகி, 26ஆம் தேதி சட்டமன்றம் கூட்டத்தை முடிக்கவிருந்த நேரம்.

ராமதாஸும், அன்புமணியும் என்னைத் தொடர்புகொண்டு உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு சென்று. முதல்வரைச் சந்தித்து, இன்றே சட்டமன்றத்தில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டனர் .

நான் உடனடியாக சென்றேன். முதல்வரைச் சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கூட பெறவில்லை. உடனடியாக சட்டமன்றத்துக்குச் சென்றேன். விசிட்டர்ஸ் அறையில் காத்திருந்தேன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் வந்தார்கள். அவர்களிடம் இன்றே வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றச் சொன்னார் ஐயா ராமதாஸ் என்று கூறி போன்போட்டும் கொடுத்தேன்.

இன்று சட்டமன்றம் முடிந்தது என்று முதல்வர் சொல்ல, அதற்கு நான் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆட்சியில் சட்டமன்றத்திலிருந்த எனக்குத் தெரியும், இப்போதே சட்டமன்ற அலுவலர்களை அழைத்து மதியம் சட்டமன்றம் இருக்கிறது என்று அழைப்பு கொடுங்கள் என்றேன்.

அப்போது முதல்வர் எடப்பாடி கூட்டணி முடிவாகவில்லை, தொகுதி எத்தனை என்று முடிவாகவில்லை என்று வருத்தமாகச் சொன்னார். உடனே ஒரு வெள்ளை பேப்பர் கொடுங்கள் அதில் நான் கையெழுத்துப் போட்டுக்கொடுக்கிறேன். நான்தான் கட்சித் தலைவர், ஐயாவுக்கு முக்கியம் இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடுதான் என்று அழுத்தமாகச் சொன்னேன்.

அதன் பிறகு முதல்வர் உத்தரவால், மதியம் சட்டமன்றம் கூட்டம் இருக்கிறது அனைவரும் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அறிவித்தார் . இந்த அறிவிப்பை ஐயா நேரடியாகக் கேட்க, என்னோடு கை பேசியை ஆன் செய்து வைத்திருந்தேன்.

செய்தியைக் கேட்டு ஐயா ஆனந்தக் கண்ணீர் விட்டார். நமக்குத் தொகுதிகள் முக்கியம் இல்லை, இட ஒதுக்கீடுதான் முக்கியம்” என்றார்.

எந்த அதிமுக அரசு, போராட்டத்தை நசுக்க துப்பாக்கிச் சூடு நடத்தியதோ, அதே அதிமுக அரசு 10.5% சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.

**-வணங்காமுடி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share