தமிழ்நாட்டில் இனிவருகிற ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று(ஜனவரி 23) காலை சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜி உருவச்சிலைக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் மூன்றாவது அலை தொடங்கியதிலிருந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு மக்களும் ஒத்துழைப்பு வருகின்றனர். அதுபோன்று கடந்த இரண்டு வாரமாக ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கை மக்கள் சிறப்பாக கடைபிடித்து வருகிறார்கள் என்பதற்கு வெறிச்சோடிய சாலைகள் சான்றாக இருக்கிறது. மூன்றாவது அலையிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள் என்பதற்கு இந்த ஊரடங்கு வெற்றி சான்றாக இருக்கிறது” என்று கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நீடிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,” சமீப காலமாக தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தது. ஆனால் நேற்றைய பாதிப்பையும், இன்றைய பாதிப்பையும் ஒப்பிடும்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் 9 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு 6 ஆயிரம் என்ற அளவில் குறைந்து வந்திருப்பது மனநிறைவு அளிக்கிறது. பொதுவாகவே, இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது என்பது ஆறுதலான விஷயம். விரைவில் இந்த தொற்றுக்கு முற்று ஏற்படுகிறபோது, முழு ஊரடங்கு தேவையில்லாத ஒன்றாகிவிடும். எனவே,கொரோனா தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு குறித்து முடிவுகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.
கொரோனா உயிரிழப்பு குறித்து பேசிய அவர்,”முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் யாரும் இதுவரை மரணத்தின் எல்லைக்கு சென்றதில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல், இணைநோய் இருக்கிறவர்கள், வயது மூத்தவர்கள்தான் 95 சதவிகிதம் கொரோனா பாதிப்பினால் உயிரிழக்கின்றனர்” என்று கூறினார்.
**-வினிதா**
�,