ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவைக் கடந்த மார்ச் 9ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை ஜாமீனில் விடுவித்தது.
இவ்வழக்கு மீண்டும் இன்று (ஏப்ரல் 27) உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர். கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன்,
’பேரறிவாளன் விடுதலை தொடர்பாகத் தமிழக அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறார். 32 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் நன்னடத்தையுடனும் முன்மாதிரி நபராகவும் செயல்பட்டார். அவரை விடுதலை செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.
இதை விசாரித்த நீதிபதிகள் யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் ஏன் பேரறிவாளன் சிக்கிக்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றமே ஏன் அவரை விடுதலை செய்யக் கூடாது என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் திவேதியிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த ராகேஷ் திவேதி, ‘இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதற்கான உரிய அதிகாரம் கொண்ட அரசு எது என்பதுதான் சர்ச்சையாக உள்ளது’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் மீண்டும் யார் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குள் செல்லாமல் அவரை விடுதலை செய்வதற்கு நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், ‘தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்’ என்று கூறினார்.
இதை விசாரித்த நீதிபதிகள், ‘ஆளுநர் முடிவெடுக்காமல் எந்த விதியின் அடிப்படையில் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, ‘சட்டப் பிரிவு 72-இன் கீழ் அனுப்பினார்’ என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ‘30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் சிறைத்தண்டனை பெற்று வருகிறார். இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகள் மூலம் பலன் பெற்ற மற்றவர்களிடம் இருந்து அவர் எந்த விதத்தில் வேறுபடுகிறார்’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, ‘ஆளுநருக்கு அதிகாரம் இல்லாத விவகாரம் அவரது பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் உள்ளது. அதைத் தவிர்த்து ஆளுநர் முடிவு எடுத்திருந்தால் அது தன் அதிகாரத்தை மீறுவது போன்றதாகும்’ என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் கூறினார்.
அப்போது அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கு மிகப்பெரிய பாதகமாகிவிடும் என்று கூறியதுடன் இந்த வழக்கு விசாரணையை வரும் புதன் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த ஒருவார காலத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்துத் தெளிவான முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இவ்விவகாரத்தில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்தும் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் ஜனவரி 27ம் தேதி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாகத் தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**