ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டுமென காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்த இரண்டு மாதங்களாக அமலில் இருக்கும் ஊரடங்கால் அன்றாடப் பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். முறையான வருமானம் இல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நாடு முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய்க்கான தொகுப்பை அறிவித்தார். இது கடன் அளிப்பது பற்றி மட்டுமே பேசுவதாகவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் எதையும் வழங்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேற்று (மே 25) வெளியிட்ட கட்டுரையில், “இந்தியாவுக்குத் தற்போது புதிய பட்ஜெட் தேவைப்படுகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் இனி தேவைப்படாது. ஆகவே, மத்திய அரசு ஜூன் 1ஆம் தேதி புதிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும். புதிய பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 40 லட்சம் கோடியாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதற்கு அனைத்து மாநிலங்களிலும் வரும் 28ஆம் தேதி ஆன்லைன் பிரச்சாரம் மேற்கொள்கிறது காங்கிரஸ். வருமான வரி வரம்புக்கு வெளியே உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஊரடங்கு நிவாரண நிதியாக தலா 10,000 ரூபாயை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி தொகுப்பின் உண்மை நிலை என்ன என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
**எழில்**�,