கங்கை நதிக்கு செலவிடப்பட்ட தமிழக சிஎஸ்ஆர் நிதி!

Published On:

| By Balaji

தமிழகத்தின் சிஎஸ்ஆர் நிதியில் ஒரு பகுதி, கங்கையை சுத்தப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டதாக ஒன்றிய அமைச்சர் புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.

இந்திய நிறுவனங்கள் சட்டம் 2013, 7ஆவது அட்டவணை, பிரிவு 135-இன் படி 500 கோடி ரூபாய் நிகர மதிப்பு கொண்ட நிறுவனங்கள், 1000 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், 5 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டியிருக்கும் நிறுவனங்கள் தங்களது லாபத்திலிருந்து இரண்டு சதவீதத்தை சிஎஸ்ஆர் எனப்படும் கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்ற பெயரில் சமூக பங்களிப்புக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும். இந்த நிதியைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது அறக்கட்டளை மூலமாகச் செலவு செய்யலாம்.

இந்த நிதிக்கான திட்டமிடுதல் செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணியை அந்த நிறுவனத்தின் குழு செயல்படுத்தும். இதில் அரசின் வழிகாட்டுதல் எதுவும் இருக்காது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாகத் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் சிஎஸ்ஆர் நிதியைப் பிரதமர் கேர்ஸ் நிதி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த சிஎஸ்ஆர் நிதியை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

தற்போது, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் சிஎஸ்ஆர் நிதி குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம், மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை இணையமைச்சர் ராவ் இந்தெர்ஜித் சிங் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்பாக விவரங்கள் குறித்து அவர் அளித்த பதிலில், “தமிழகத்தில் 2017-18ஆம் நிதியாண்டில், 1305 நிறுவனங்கள் ரூ.627.75 கோடியும், 2018-19ஆம் நிதியாண்டில் 1455 நிறுவனங்கள் ரூ.829.27 கோடியும், 2019-20ஆம் நிதியாண்டில் 1316 நிறுவனங்கள் 919.05 கோடியும் சமூக பங்களிப்புக்காக நிதி அளித்துள்ளன. இந்த நிதி விலங்குகள் நலன், கல்வி, ஹெல்த் கேர், குடிநீர், குடிசை பகுதி ஆகியவற்றுக்காகச் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்திலிருந்து பெறப்பட்ட சிஎஸ்ஆர் நிதியிலிருந்து ஒரு பங்கு வடமாநிலங்களில் பாயும் கங்கை நதியைத் தூய்மை செய்வதற்காகச் செலவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017-18 மற்றும் 2018-19ஆம் நிதியாண்டுகளில் 0.13 கோடியும், 2019-2020ஆம் நிதியாண்டில் 0.26 கோடியும் கங்கை நதியை தூய்மை செய்ய செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விமர்சித்து ட்வீட் செய்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், “தமிழகத்தில் கார்பொரேட் சமூக பொறுப்பு நிதி(CSR)நிதி ஒதுக்கீடு குறித்த எனது கேள்விக்கு நிதியின் ஒரு பகுதி சுத்தமான கங்கை நதிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார். புனித கங்கை நதி தமிழகத்தின் வழியாகப் பாய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சுமார் 915கோடி 2019-2020 ல் தமிழகத்தில் எப்படிச் செலவிடப்பட்டது என்ற கேள்விக்குப் பதில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share