wஊரடங்கு நீட்டிப்பு: ஆலோசிக்கும் மத்திய அரசு

politics

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது இன்றோடு இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது சில நூறுகளாக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 4,887ஐ எட்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது கட்டத்தில்தான் இருப்பதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில், மூன்றாவது கட்டத்துக்கு நகராமல் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தின.

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7) ஏஎன்ஐ ஊடகம், ‘பல்வேறு மாநில அரசுகளும், பல துறை நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் கோரி வருகின்றனர். ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசும் சிந்தித்து வருகிறது மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன’ என்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரானது ஒரு மிக நீண்ட யுத்தம் என்று நேற்று முன்தினம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த யுத்தத்தில் நாம் சோர்வடையவோ அல்லது தோற்கடிக்கப்படவோ கூடாது” என்று ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்பதை சூசகமாகத் தெரிவித்திருந்தார். அதன்பிறகு ஒருநாள் கழித்து இவ்வாறு செய்தி வெளியாகியுள்ளது.

இருப்பினும் இந்த விவகாரத்தில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. பிரதமர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம், அதன் பின்னர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு இதுதொடர்பாக முடிவெடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0