பகுதி 3 – தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

Published On:

| By Balaji

புதிய பொருளாதார முறையுடன் பொருந்திப்போகும் பார்ப்பனியம்!

கடந்த இரு பகுதிகள் தமிழகம் கடந்து வந்த பாதையையும் தற்போது அது சந்திக்கும் முரண்பாட்டையும் பேசியது. இந்தப் பகுதி புதிய பொருளாதார முறைக்கும் பார்ப்பனியப் பொருளாதார முறைக்குமான ஒற்றுமையை அது இந்தியாவின் தொழில், தொழிலாளர், கல்வி, மருத்துவம் ஆகியவற்றை எப்படி மாற்றி அமைக்கும். அது எப்படி தொண்ணூறுகளுக்குப் பிறகு ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்து மீண்டும் பார்ப்பனியத்தை மீட்டுக் கொண்டுவர துடிக்கும் பாஜக – ஆர்எஸ்எஸ்ஸின் நிகழ்ச்சி நிரலுடன் பொருந்திப் போகிறது என்பதைப் பேசுகிறது.

பார்ப்பனியத்தின் பாசிச சர்வாதிகார அரசியலைச் சரியாக இனம் கண்டு திராவிட பெரியாரிய அம்பேத்கரிய ஜனநாயக சக்திகள் கருத்தியல் ரீதியாக எதிர்கொண்டு அம்பலப்படுத்தி வரும் அதேவேளை, அதன் பொருளாதார அடித்தளம் மற்றும் தேவை குறித்து குறைவாகவே விவாதிக்கின்றன. இதைப் பேசவேண்டிய மார்க்சியர்களைப் பற்றி பெரிதாகப் பேசுமளவு அவர்களின் செயல்பாடுகள் இருந்ததும் இருப்பதும் இல்லை. புரிந்துகொண்ட அளவில், பார்ப்பனியத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு உற்பத்திக்கான **உழைப்பை பொதுவாக்கி அதன் பலன்களைச் சிலர் மட்டும் தனதாக்கிக் கொள்வதாக இருக்கிறது. உழைப்பவர்களுக்கு உயிர்வாழ போதுமான அளவு மட்டும் பொருளைக் கொடுத்துவிட்டு மீதி அனைத்தையும் ஆளும் சிறு கூட்டத்திடம் கொண்டுபோய் குவிக்கிறது.** உழைக்கும் மக்களைச் சோற்றுக்கு அல்லாடுபவர்களாக இதற்கு எதிராக ஒன்றிணைந்து அரசியல் செய்யும் ஆற்றலற்றவர்களாக மாற்றுகிறது.

**மின்னணு பொருளாதாரம் ஏற்படுத்தும் மாற்றங்கள்**

தரவுகளின்வழி செயல்படும் (Data Driven Economy) இந்தப் புதிய மின்னணு பொருளாதார வர்த்தகமும் கொத்தமல்லி, கறிவேப்பிலை முதற்கொண்டு அனைத்தையும் கணினியின் மொழியில் அடையாளமிட்டு முதலில் அதன் தேவையையும் அளிப்பையும் கணக்கிடுகிறது. பின்பு அந்த தேவைக்கேற்ப கொள்முதல் செய்து விற்பனை செய்வதன்மூலம் எல்லா பொருள் விற்பனையிலும் நட்டமின்றி ஈடுபட்டு லாபமடைய வழிவகுக்கிறது. இதுவரையிலும் இந்தச் சந்தையைக் கையில் வைத்திருக்கும் விவசாயிகள், வியாபாரிகள், சிறு குறு உற்பத்தியாளர்களைச் சந்தையில் இருந்து வெளியேற்றி, மொத்த சந்தையையும் தனதாக்கிக் கொள்கிறது.

முறைசாரா பொருளாதாரமாகப் பெரும்பான்மை மக்கள் பங்கேற்புடன் இயங்கி வரும் இதைக் கைப்பற்றி முறையான பொருளாதாரமாக அறிவித்து ஜிடிபி எண்ணை உயர்த்திக்காட்டி ‘வளர்ச்சி’ எனப் படோபடமாக அறிவிக்கும் முனைப்புடன் செயல்படுகிறது. கோடிக்கணக்கில் இயங்கும் கடைகளை லட்சக்கணக்கான கடைகளாகவும், லட்சக்கணக்கில் இயங்கும் உற்பத்தி தொழிற்சாலைகளை ஆயிரக்கணக்கானதாகவும் சுருக்குகிறது. இவற்றைப் பெருமளவு இயந்திரமயமாக்கி, தொழிலாளர்களின் அளவைக் குறைத்து, உற்பத்தி செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கிறது.

தொழில்களை முறைப்படுத்தி தனதாக்கிக்கொள்ளும் அதேநேரம் தற்போது இந்த முறைசாரா பொருளாதாரத்தில் வேலை செய்துவரும் தொழிலாளர்களை முறையான தொழிலாளர்களாக மாற்றாமல் இருக்கும் நிலையில் இருந்து மேலும் மோசமான எந்த பணிப் பாதுகாப்பும் அற்ற அத்துக்கூலிகளாக வைத்துக்கொண்டு அவர்களின் உழைப்பை உறிஞ்சி மேலும் செல்வத்தைச் சேர்க்கிறது. சுருக்கமாக இது **முதலாளிகளுக்கு முறையான பொருளாதாரமாகவும் (Formal Economy) தொழிலாளர்களுக்கு முறையற்ற ஜிக் பொருளாதாரமாகவும் (Gig Economy) இருக்கிறது.**

**புதிய பொருளாதார முறையும் புதிய கல்விக் கொள்கையும்**

இந்த இயந்திரமயமாக்கப்பட்ட இணையத்தை அடிப்படையாகக் கொண்டு மையப்படுத்தப்பட்ட (Centralized) பொருளாதார முறைக்கு அதிக மூளைத்திறன் கொண்ட குறைந்த அளவிலான தொழிலாளர்களே தேவைப்படுகிறார்கள். மற்றவர்கள், எழுதப்படிக்க தெரிந்த இணையச் சாதனங்களை இயக்க தெரிந்தவர்களாக இருந்தால் போதுமானது. மூளை உழைப்புக்கு முதல் மூவர்ணத்தைக் கொண்டும் மற்ற இடத்தை மற்றவர்களையும் கொண்டும் நிரப்பும்போது அது நால்வர்ண தர்மத்துடன் சரியாக பொருந்தி நவீன குருகுலக் கல்வியாக மாறிப்போகிறது. அதுவே புதிய கல்விக் கொள்கையாக நடைமுறை வடிவம் காண்கிறது.

மற்ற நாடுகளில் இந்த புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு கல்வி, மருத்துவத்தில் உள்ள இடம், மருத்துவர், ஆசிரியர் சார்ந்த பிரச்சினைகளை, மருத்துவத்தில் ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாக அணுகி, தீர்வு வழங்குவதில் உள்ள குறைபாட்டை, வேறுபட்ட கற்றல்திறன் கொண்ட மாணவர்களை ஒரே கற்றல்முறையைக் கடைப்பிடிப்பதில் இருக்கும் சிக்கல்களை இந்தப் புதிய தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண முயற்சி செய்கிறார்கள். நோயரின் ஜீன் கட்டமைப்பு முதல் சிக்கலான உடலின் அனைத்துப் பகுதிகளின் செயல்பாடுகளை செயற்கை நுண்ணறிவு(AI) கொண்டு முழுமையாக அலசி ஆராய்ந்து, அந்த நபருக்கேற்ற மருத்துவத் தீர்வை வழங்குவது எப்படி என ஆய்வு மேற்கொள்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு மாணவரின் விருப்பத்துக்கேற்ற கற்றல் திறனுக்கேற்ற முறையை உருவாக்கி எல்லோரையும் இணையான திறன் கொண்டவர்களாக ஆக்குவது குறித்த திசையில் பயணிக்கிறார்கள்.

இந்தியாவில் அனைத்துப் பகுதியிலும் கல்விக்கூடங்களைக் கட்டி எழுப்பி இந்தத் தொழில்நுட்பங்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்று எல்லோரின் திறனை மேம்படுத்த பயன்படுத்துவதற்குப் பதிலாக நாட்டின் அனைத்து கல்லூரிகளுக்கும் நீட் போன்ற அனைத்திந்திய பொதுத்தேர்வு முறையை ஒன்றியம் கொண்டு வருகிறது. இப்படியான ஒன்றுக்கு எந்த தேவையும் எழாத நிலையில் இதைக் கொண்டுவருவதை பார்ப்பனிய அரசியலாக மட்டும் பார்க்காமல் அதன் நோக்கத்தையும் பொருளாதார தேவையையும் சேர்த்து புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. தற்போது உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வு பயிற்சி நிலையங்கள் நாடு முழுவதும் இயங்குகின்றன. இது கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் வியாபாரம்.

இந்தப் போட்டித் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்ய பயன்படும் தகவல்களைத் தொகுத்து மாணவர்கள் அதில் கற்றுத்தேர்ந்து வெற்றிபெறும் வகையில் ஓர் இணையக்கல்வி செயலியைத் தயாரித்து நாடு முழுவதும் வழங்கும்போது, தற்போது இதில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான பயிற்சி மையங்களையும் பயிற்றுவிப்பாளர்களையும் இணையம், இணைய சாதனம், செயலி ஆகியவை மூலம் பதிலீடு செய்கிறது. லட்சக்கணக்கானோருக்குச் செல்லும் பணம் ஒருசில நிறுவனங்களுக்குச் சென்று பெருலாபம் தருகிறது. அதனால் இவ்வகையான சேவை வழங்கும் நிறுவனங்கள் பில்லியன் டாலர் மதிப்பு கொண்டவையாக தற்போது வளர்ந்து வருகின்றன.

இவற்றின் விரிவாக்கத்துக்கேற்ப ஒன்றியம் ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களுக்கு மட்டுமல்ல; அரசு கலைக்கல்லூரிகள், செவிலியர் படிப்புவரை விரிவாக்குகிறது. இதன்மூலம் **நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பெரும் பணம் செலுத்தி உயர்தரமான நுழைவுத்தேர்வு பயிற்சி பெறுபவர்கள் மட்டும் படிக்கும் நிலையை உருவாக்குகிறது. அதாவது பணம் உள்ளவர்களுக்குப் பட்டப்படிப்பு. அந்தப் பணம் படைத்தவர்கள் பெரும்பாலும் முதல் மூன்று வர்ணம் என்று சொல்ல வேண்டியதில்லை. ** அவர்களே தனியார் முதல் அரசு வேலைகள்வரை அனைத்து உயர் பதவிகளிலும் அமர்வார்கள். மற்றவர்கள் அவர்களின்கீழ் அடிபணிந்து வேலை செய்வார்கள். நவீன முறையில் நால்வர்ண தர்மம் செயல்பாட்டுக்கு வரும்.

**புதிய பொருளாதார முறையும் மருத்துவமும்**

அடுத்து மருத்துவம். குடியரசு தின விழாவின்போது புதிய காப்பீட்டுத் திட்டத்தைத் தலைமை அமைச்சர் அறிவித்ததில் தொடங்கி வெற்றிகரமாக இயங்கிவரும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியைத் தனியார்மயமாக்குதல், அந்நிய நிறுவனங்கள் 73 சதவிகிதம் வரை இந்த துறையில் முதலிட அனுமதி எனத் தொடர் அறிவிப்புகள் வருகின்றன. அடுத்து பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட உயர்தர மருத்துவ சேவை வழங்கும் நிறுவனங்கள் முளைக்கும். **அமெரிக்காவில் உள்ளது போன்று காப்பீடு உள்ளவர்களுக்கே மருத்துவம் என்பதை நோக்கி நகரும். மருத்துவச் செலவுகள் வானளவு உயரும்.**

தற்போது இந்தியாவில் ஓரிடத்தில் பொதுவான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டு அனைவரும் அங்கே சென்று அந்த சேவைகளைப் பெறுவதான நடைமுறை இருக்கிறது. இப்படி பொதுவாக பொதுமக்களுக்கானதாக இயங்கிவரும் இந்தக் கட்டமைப்பை உடைத்து ஒவ்வொரு தனிநபருக்குமானதாக மாற்றப்படுகிறது. தனிநபரின் தேவைக்கு வசதிக்கேற்ற வகையில் தனிச்சிறப்பான மருத்துவரை, ஆசிரியரை, மாணவருக்கு ஏற்ற கற்றல் முறையை இணையம் மூலம் ஒவ்வொருவர் வீட்டின் கணினித் திரையில் கொண்டுவந்து சேர்க்கிறது.

**கல்வியும் மருத்துவமும் காசுள்ளவருக்கே**

பணமுள்ள மாணவரின் மனமறிந்து அதற்கேற்ற வகையில் பயிற்றுவிக்கும், வசதி படைத்தவருக்கு வயிற்றுவலி என்றால் இணையத்தில் மருத்துவரின் நேரத்தைப் பெற்று கணினித் திரையில் அவருடன் கலந்துரையாடி அடுத்த சில நிமிடங்களில் அவர் பரிந்துரைக்கும் மருந்துகள் வீட்டின் வாயிலில் கொண்டு வந்து சேர்க்கும் வசதியை வழங்கும் அதேவேளை, பணமற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழைகள் இந்த சேவைகளைப் பெறுவதில் இருந்து விலக்குகிறது. அவர்களின் இந்த அடிப்படை உரிமைகளை மறுக்கிறது. மக்கள் சமூகத்துக்கு (Public Goods) பொதுவாக உள்ளவற்றை உடைத்து தனிநபர்களுக்கானதாக (Private Goods) மாற்றுவதன் மூலம் இதில் ஈடுபடும் ஒருசில நிறுவனங்கள் பெருலாபம் ஈட்ட வழிசெய்கிறது.

இந்தப் புதிய கல்வி, மருத்துவ முறைகளுக்கேற்ற உணரிகள் (Sensor) போன்ற மருத்துவப் பொருட்களையும், திறன்பேசி, இணையம் போன்ற தகவல் தொழில்நுட்பப் பொருட்களையும் ஒவ்வொருவரும் வாங்கும்போது இவற்றுக்கான தேவையை அதிகரித்து இணையம் சார்ந்த புதிய பொருளாதார முறைக்கு ஊக்கமாக அமைகிறது. இப்படி விவசாயம், தொழிற்துறை, உற்பத்தி, விற்பனை, கல்வி, மருத்துவம் என அனைத்தையும் இணையம் என்ற ஒற்றைப் புள்ளியில் குவித்து பெருலாபம் ஈட்ட துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய பொருளாதாரமும் இந்த இணைவை எந்த கேள்வியும் இன்றி ஏற்று இதில்வரும் பலனில் ஒரு பகுதியைக் கூலியாகப் பெற்றுக்கொண்டு இதற்கேற்ற சாதிய சமூக கட்டமைப்பை வழங்கும் இந்திய பார்ப்பனியமும் இணைந்து போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

**பார்ப்பனியத்துடன் முரண்பட்ட ஏகாதிபத்தியம் இணைந்து செல்ல காரணம்**

முன்பு தொண்ணூறுகளில் இறுக்கமாகக் கட்டப்பட்ட இந்த சாதிய கட்டமைப்பின் மேல் இயங்கிய பார்ப்பனிய முற்றுருமை அமெரிக்க ஏகாதிபத்திய மூலதன பாய்ச்சலுக்கும், உற்பத்தி பெருக்கத்துக்கும், பொருட்களுக்கான சந்தைக்கும் முட்டுக்கட்டையாக நின்று எதிர்த்தது. அன்றைய எதிர்ப்பில் ஜனசங்கமாக இயங்கிய பிஜேபி அங்கமாக இருந்தது. இறுதியில் ஏற்பட்ட உடைப்பு அதுவரையிலும் பார்ப்பனியத்தால் முடக்கி வைக்கப்பட்டு இருந்த பிராந்திய முதலாளித்துவ சக்திகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. அந்த உடைப்பைச் சரிசெய்து மீண்டும் ஒட்டவைக்க காத்திருந்த பிஜேபியும் அவ்வாறான உடைப்பின்றி ஒட்டுமொத்த இந்தியச் சந்தையையும் தற்போது தனதாக்கிக்கொள்ள முனையும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒன்றிணைந்து அப்போது ஏற்படுத்திய குறைந்தபட்ச பொருளாதார போட்டியையும் இல்லாமல் ஆக்கி அதற்கான ஜனநாயகத்தை மறுத்து எதேச்சதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது மேலும் வலுப்பெறும் பட்சத்தில் அது தற்போது நிலவும் குறைந்தபட்ச ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும்.

வேதகாலத்துக்குப் பின்பு தோல்வியடைந்த பார்ப்பனியமும் அதைத் தலைமை தாங்கி வழிநடத்திய பார்ப்பனர்களும் வரலாறு முழுக்க ஆள்வோரின் அங்கமாக இருந்து அவர்களையும் அவர்களின் இருப்புக்கு அடிநாதமாக இருந்து வரும் பார்ப்பனிய சாதிய கட்டமைப்பையும் கலையாமல் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். இது கலையாமல் இருப்பதற்கும் சுமார் ஈராயிரம் வருடமாக இந்திய நிலப்பரப்பின் உற்பத்தி பெருக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருப்பதற்கும் தொடர்பில்லாமல் இல்லை. அதேபோல உற்பத்தி பெருக்கத்துக்குத் தேவையான தொழில்நுட்ப வளர்ச்சி அவ்வாறான வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்மிக்க தொழிலாளர்கள் அவர்களை உருவாக்க தேவையான கல்வியை மறுப்பது என இதை நிறுவனமயமாக்கி செயல்பட்டு வந்திருக்கிறார்கள். இதோ, இப்போதும் ஏகாதிபத்தியத்துடன் இணைந்து இந்தக் காலத்துக்கேற்ற வகையில் இவர்கள் மட்டும் பலனடையும் வகையில் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் இதைப் பரவலாக்கி இந்திய மக்களின் வாழ்வில் ஓர் எழுச்சியை, பாய்ச்சலை நிகழ்த்தும் வாய்ப்பைத் தடுத்து தங்களுக்கு மட்டுமானதாகச் சுருக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

**பகுதி 1 – [தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2021/04/27/18/tamil-nadu-history-and-development-deep-anallysis)**

**பகுதி 2 – [தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2021/04/28/16/Tamil-Nadu-history-and-development-a-deep-analysis)**

**ஆய்வின் தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில் **

**பாஸ்கர் செல்வராஜ்**

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு **[naturebas84@gmail.com](mailto:naturebas84@gmail.com)**

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share