பகுதி 5: தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!

politics

தோற்கும் அமெரிக்கக் குதிரையின் மீது பந்தயம் கட்டும் இந்தியா!

கடந்த நான்கு பகுதிகள் தமிழகம் கடந்து வந்த பாதை, புதிய பொருளாதார முறை, எதிர்கொள்ளும் முரண், பார்ப்பனிய – ஏகாதிபத்திய இணைவு, அதன் அரசியல் பொருளாதார தேவை, சீன – அமெரிக்க போட்டி, இந்தியாவை அமெரிக்காவுடன் இணைத்த உலக அரசியல் பின்னணி, அதன் பிறகான உலகத்தின் போக்கைப் பற்றி பேசியது. இந்தப் பகுதி இந்தியா தெரிவு செய்த அமெரிக்காவின் பொருளாதார நலிவையும் அது சீனாவுடன் போட்டியிட்டு வெல்லும் சாத்தியங்கள் குறித்தும் பேசுகிறது.

உலக நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் சூழலில் அமெரிக்காவும் சீனாவும் எவ்வளவு நாட்களுக்கு மல்லுக்கட்டுவார்கள் என்பதும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. மூடப்பட்ட பொருளாதாரத்தால் வேலையிழந்த மக்கள் வாங்கும் ஆற்றலற்றவர்களாக மாறி வறுமைகோட்டுக்குக் கீழ் சென்று கொண்டிருக்கிறார்கள். பொருள் விற்பனை குறைந்து கொண்டிருக்கும் சூழலில் முன்பு உற்பத்தி செய்து கொண்டிருந்த நிறுவனங்களே உற்பத்தியை நிறுத்தி கதவை மூடிக்கொண்டிருப்பதால் மக்கள் மீண்டும் வேலைக்கு முழுமையாக திரும்புவதோ அல்லது புதிய வேலைவாய்ப்புகளுக்கோ வாய்ப்பில்லை.

**அமெரிக்க நுகர்வை ஆதாரமாகக்கொண்ட பொருளாதார சுழற்சி **

2008-க்கு முன்புவரை உலக பொருளாதார சுழற்சியின் மையமாக அமெரிக்காவே இருந்து வந்தது. உற்பத்திக்கு இன்றியமையாத உலக பொதுப்பண்டமான எண்ணெயைத் தனது கட்டுப்பாட்டிலும் அதை டாலரில் மட்டுமே வாங்க முடியும் என்ற சூழலை உருவாக்கியதன் மூலம் உலக உற்பத்தியையும் வர்த்தகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இதன்மூலம் பெருகிய மூலதனத்தைக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களையும் அதைப் பயன்படுத்தி விலையுயர்ந்த பொருட்களான விமானம், கப்பல், ஆயுதங்கள், மகிழுந்துகள் (Car), தகவல் தொழில்நுட்பப் பொருட்களையும் உற்பத்தி செய்து, அமெரிக்க நிறுவனங்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்தன. இப்படி விற்பனை செய்து ஈட்டும் பெரும் செல்வத்தில் பலனடைந்த அமெரிக்க மக்களின் வாங்கும் திறன் மற்ற நாடுகளைவிட அதிகமானது.

அந்த நுகர்வோருக்குத் தேவைப்படும் குறைவான மதிப்புகொண்ட பொருட்களை உலகின் மற்ற நாடுகளில் உள்ள மக்கள் ஏற்றுமதி செய்து டாலரை ஈட்டி அவர்களுக்குத் தேவைப்படும் எரிபொருளையும் மற்ற மதிப்புமிக்க பொருட்களையும் வாங்கி வந்தனர். இந்த விலையுயர்ந்த பொருள் உற்பத்தியில் இணைந்துகொண்ட விமானம் உற்பத்தி செய்யும் பிரான்ஸ், மகிழுந்துகள் உற்பத்தி செய்யும் ஜெர்மனி, தகவல் தொழில்நுட்பப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தென்கொரியா, ஜப்பான், தைவான் போன்ற நாடுகள் அவர்களுக்கு இணையான வளர்ச்சி கண்டார்கள். இந்த அமெரிக்க ஏற்றுமதியில் பங்கெடுத்த சீனா, இந்தியா போன்ற நாடுகள் குறிப்பிட்ட அளவு பலன் பெற்றன. 1991இல் இந்த நாடுகளின் ஜிடிபியில் ஏற்றுமதியின் பங்கு முறையே 14.49, 8.49 விழுக்காடாக இருந்து 2006இல் 36.04, 21.29 ஆக உயர்ந்தது.

** சுழல முடியாமல் சுற்றிக்கொண்டிருக்கும் அமெரிக்க பொருளாதார சக்கரம் **

இந்த அமெரிக்காவை மையமாகக்கொண்டு சுழலும் பொருளாதாரச் சுழற்சி சக்கரம் எப்போதும் வேகமாக எந்த தடையுமின்றி சுழலும் சக்கரமல்ல. அதை சுற்றுவதற்கு சந்தையின் தேவை எப்போதும் இருக்க வேண்டும். அந்த மக்களின் வாங்கும் திறன் என்ற ஆற்றல் இருக்கும்வரை தான் சக்கரம் சுழல முடியும். அது தீர்ந்துப்போகும்போது ஒன்று, குறையும் மக்களின் ஆற்றலுக்கு ஏற்ப உற்பத்தியைப் பெருக்கி, பொருளின் விலையைக் குறைக்க வேண்டும் அல்லது அவர்களின் சம்பளத்தை உயர்த்தி வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும் அல்லது வாங்கும் திறனுடைய மக்களுக்கு மேலும் புதிய பொருட்களை உருவாக்கி மக்களை மேலும் வாங்க வைக்க வேண்டும்.

உலகமயத்துக்குப் பிறகு நடந்த உற்பத்தி பெருக்கம் பொருட்களின் விலையைப் பெருமளவு குறைத்திருக்கிறது. புதிய தகவல் தொழில்நுட்பப் பொருட்களை உருவாக்கி புதிய சந்தையை உருவாக்கி இருக்கிறது. ஆனால், இவை வளர்ந்த அளவு மக்களின் வாங்கும்திறன் பெரிதாக வளரவில்லை. மனிதர்களால் மலைபோல உருவாக்கப்பட்ட செல்வம் அனைத்தும் ஒரு சிலரிடம் போய் குவிந்திருக்கிறது. முன்பு ஒரு தொழிலை தொடங்க தேவைப்படும் மூலதனத்துக்கு மக்கள் வங்கியில் சேமித்துவைத்த செல்வத்தைப் பெற்று அதில் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை அவர்களுக்குப் பிரித்து கொடுக்கும் பொருளாதார நடைமுறை இருந்தது. இப்போது ஒரு சிலரிடம் பெருகிக் கிடக்கும் செல்வத்தை மேலும் பெருக்க உலகம் முழுவதும் முதலிட அலையும் சூழல்.

** செல்வக்குவிப்பை மேலும் அதிகரிக்கவைக்கும் பொருளாதார கொள்கைகள் **

விளைவு செல்வப்பரவலாக்கம் இல்லாமல் போய் பெருமளவு மக்கள் வாங்கும்திறனை இழந்திருக்கிறார்கள். கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கும் நிலையிலுள்ள மக்கள் அவர்கள் தங்களின் எதிர்காலத்துக்கு சேமித்து வைத்த பணத்தையும் செலவு செய்ய தூண்டினார்கள். அதுவும் போதாது என்று வங்கியில் வைத்திருக்கும் பணத்தை எல்லாம் வாங்கும் வழியற்றவர்களுக்குக் கடனாகக் கொடுத்து பொருட்களுக்கான சந்தையைச் செயற்கையாக உருவாக்கினார்கள். எதிர்காலத்தில் சம்பாதிக்க போகும் செல்வத்துக்கு ஈடாக இப்போதே செலவு செய் என்று சொல்லி கடன் கொடுத்து மக்களை பொருளை வாங்க வைத்து கடனாளி ஆக்கினார்கள்.

அது 2008இல் அமெரிக்க பொருளாதார சரிவில் கொண்டுபோய் நிறுத்தியது. இதற்கு அவர்கள் கண்டறிந்த தீர்வு, பணத்தை மேலும் அச்சிடுவது. கூடவே வங்கியில் உள்ள பணத்துக்கான வட்டி விகிதத்தை சுழியம் ஆக்குவது. பொருளாதாரம் வளரும்போது அதற்கேற்ப பணத்தை இப்படி அச்சிடுவது இயல்பான நடவடிக்கை. ஆனால், வீழும்போது அச்சிடுவது என்பது நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தின் மதிப்பை செயற்கையாகக் குறைப்பது அல்லது நமக்கு தெரியாமல் நம்மிடம் திருடுவது. ஏனெனில் இப்படி பணம் அதிகமாக புழங்கும்போது ஏற்படும் பணவீக்கத்தை அதாவது பணம் இழக்கும் மதிப்பை ஈடுசெய்ய கொடுக்கும் வட்டியையும் சுழியம் ஆக்குவதால் பணம் இழக்கும் மதிப்பை வங்கிகள் ஈடுசெய்வதில்லை. மாறாக, அங்கே வைத்திருக்கும் நமது பணத்தின் மதிப்பு குறைகிறது. சேர்த்து வைத்த செல்வத்தை நாம் சிறுக சிறுக இழக்கிறோம்.

இப்போது மக்கள் ஒன்று, இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஏதாவது பொருளை வாங்கி செலவு செய்து, மதிப்புடைய பொருளாக்க வேண்டும் அல்லது மதிப்பு குறையாமல் இருக்க முதலீடு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை வங்கிக்கடன் எளிமையாகவும் குறைந்த வட்டியிலும் எல்லோருக்கும் கிடைக்க வழி செய்தது. கடனில் வாங்கிய நவீன பொருட்களும், வாகனங்களும் வீடுகளில் அதிகரித்தன. ஆனால், மக்களின் சராசரி நிகர வருமானம் வீழ்ந்துகொண்டிருந்ததே தவிர, உயரவில்லை. முன்பு 2008 பொருளாதார நெருக்கடி வரை இந்தக் கடன் பொருளாதாரம் இந்தியாவில் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்ததால் பெரிய பாதிப்பின்றி தப்பித்தது.

அதன் பிறகு அவிழ்த்து விடப்பட்ட கடன் பொருளாதாரம் வங்கிகளின் வாராக்கடன்களை அதிகரித்திருக்கிறது. இப்போது கொரோனா பாதிப்பு இந்த பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது. அவசரகதியில் அவசியமின்றி புதிய மின்னணு பொருளாதார முறையைச் செயல்படுத்த அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு இந்திய வளர்ச்சியைக் குறைத்தது. சிறு குறு உற்பத்தியாளர்களின் முதுகெலும்பை உடைந்து உட்கார வைத்தது.

** மாற்றுப்பாதையில் எழுச்சி காணும் சீனா **

இதே காலத்தில் சீனா மற்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி தகவல் விலைமதிப்புமிக்க தொழில்நுட்பப் பொருட்களுக்கான சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தது. மரபான எண்ணெய் எரிபொருளுக்குப் பதிலான மாற்றான சூரிய மின்னாற்றல் உற்பத்தி, லித்தியம் சேமக்கலங்களின் உற்பத்தி ஆகியவற்றில் தன்னிறைவு பெற்றது. எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான அமெரிக்க சார்பை தவிர்க்க, எண்ணெய் எரிவாயு மிகுந்த இரான், ரஷ்யா, வெனிசுவேலா நாடுகளில் இருந்து சொந்த நாணயத்தில் இறக்குமதி செய்வதற்கான மாற்றை ஏற்படுத்திக் கொண்டது.

புதிய பொருளாதார முறைக்கான 5ஜி, செயற்கை நுண்ணறிவு (AI), மின்னணு நாணயம். பணப்பரிமாற்றத் தொழில்நுட்பத்தைச் சொந்தமாக வளர்த்தெடுத்து போட்டிக்கு நிற்கிறது. விரைவில் பறக்க இருந்த சீனாவில் தயாராகிக்கொண்டிருக்கும் C919 விமானம் அமெரிக்காவுடனான மோதலால் நின்று போனாலும் ரஷ்யாவுடன் இணைந்து அதை முறியடிக்க தயாராகி வருகிறது. சொந்த தொழில்நுட்பத்தில் போர் விமானங்கள், விமானம் தாங்கி கப்பல்கள், ஏவுகணைகளை உருவாக்கி இருக்கிறது. நவீன ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. இவை எல்லாவற்றையும்விட 2008இல் 29229 யுவனாக இருந்த சீனத் தொழிலாளர்களின் சராசரி ஆண்டு வருமானத்தை 2019க்குள் 93383 யுவனாக உயர்த்தி இருக்கிறது. மக்கள் அனைவரையும் வறுமைக்கோட்டுக்குக் கீழிருந்து மீட்டு கிட்டத்தட்ட 50 கோடி நடுத்தர வர்க்கத்தையும் வலுவான உள்நாட்டு சந்தையையும் வைத்திருக்கிறது.

** கேள்விக்குள்ளாகும் அமெரிக்க டாலரின் உலகப்பணத் தகுதி **

கொரோனா போரில் தோற்ற அமெரிக்கா சரிந்து விழுந்த பங்கு வர்த்தக சந்தையை நிலைநிறுத்த இதுவரை சுமார் 3 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு ஊக்கத்தொகையைச் சந்தையில் கொட்டி இருக்கிறது. பைடன் பதவியேற்ற பிறகு அறிவித்த 1.9 ட்ரில்லியன் நிவாரணத் தொகையையும் கொரோனாவினால் நொறுங்கி கிடக்கும் அமெரிக்காவை மீண்டும் கட்டி எழுப்ப பரிந்துரைக்கும் 2 ட்ரில்லியன் டாலரையும் சேர்த்தால் அமெரிக்காவின் மொத்தக் கடன் 30 ட்ரில்லியனைத் தொடப்போகிறது. இப்படி 2008இல் தொடங்கிய பணம் அச்சடிப்பு இன்றுவரை தேவைப்போடும்போதெல்லாம் ட்ரில்லியன் கணக்கில் அச்சிட்டுக்கொள்வதால் எந்த பிரச்சினையும் வராதா என்று யாருக்கும் தோன்றாமல் இருக்க முடியாது.

அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் உலகம் முழுவதும் வர்த்தகத்திலும் கையிருப்பாகவும் டாலர் இருப்பதாலும் குறிப்பிட்ட அளவு அச்சிட்டு அவர்கள் சொல்வது போல அளவான முறையில் பணத்தை சகாயமாக்குவதால் (Quantitative Easing) ஏற்படும் பணவீக்கம் உலகம் முழுவதும் இருக்கும் டாலர் பயன்பாடு காரணமாக அது உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆகி அதன் பாதிப்பை எல்லா நாட்டு மக்களின் தலையில் கட்டுவதால் கடலில் கரைத்த பெருங்காயமாக கரைந்துவிடும். ஆனால், இந்த டாலர் வர்த்தக சார்பை ஆயுதமாக்கி பொருளாதாரத் தடை விதித்து சந்தையை மறுத்து இரான், வெனிசுவேலாவை சந்தையில் இருந்து வெளியேற்றியதன் காரணமாக தற்போது ரஷ்யா, இரான், வெனிசுவேலா ஆகியவை சீனாவுடன் இணைந்து எண்ணெய் வர்த்தகத்தில் டாலரை விலக்கிவிட்டன. விமானம், கார்கள், தகவல் தொழில்நுட்பப் பொருட்கள் என அனைத்து முக்கிய துறைகளிலும் அமெரிக்காவை மற்ற நாடுகள் பதிலீடு செய்து வருகின்றன. போயிங் 737 தொழில்நுட்பக் கோளாறு சில ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்பு பல மதிப்புமிக்க பொருட்களை உருவாக்கி உலகெங்கும் விற்று செல்வத்தைப் பெருக்கி அதன் ஒரு பகுதியை மக்களுடன் பகிர்ந்து அவர்களின் நுகர்வுதிறனை அதிகமாக்கியதற்குப் பதிலாக மதிப்புமிக்க டாலர்களை அச்சடித்து நிறுவனங்களிடமும் மக்களிடமும் கொடுத்து வாழவைக்கும் நிலையை தற்போது அமெரிக்கா அடைந்திருக்கிறது. இதனால் டாலரின் மற்ற நாணயங்களுக்கு எதிரான மதிப்பைத் தெரிவிக்கும் டாலர் மதிப்பு குறியீட்டு எண் (Dollar Index) 92 ஆக வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. அதாவது 8 விழுக்காடு அதன் மதிப்பை இழந்திருக்கிறது. இதனால் டாலர் கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கும், டாலர் கடன் பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் மாற்றை நோக்கி நகர தொடங்கி விட்டார்கள்.

நாடுகளின் நாணய கையிருப்பில் 70 விழுக்காடு (2014) இடத்தைப் பிடித்திருந்த டாலர் தற்போது 60 விழுக்காடாகக் குறைந்துபோய் இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களை வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். ஆகவே, இந்த அளவு கடந்த பண அச்சடிப்பு நிச்சயம் பணவீக்கத்தை உருவாக்கும் என்கிறார்கள். இந்த நிதி மற்றும் பொருளாதார ரீதியிலான அமெரிக்காவின் பலகீனத்தை சீனா பயன்படுத்தி பலனடையவும் டாலரை மேலும் பலகீனப்படுத்தி வீழ்த்தும் வேளைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

**தமிழகத்தின் உள்முரணும் எதிர்கொள்ளும் சாத்தியங்களும்!**

**[ ](https://www.minnambalam.com/politics/2021/04/27/18/tamil-nadu-history-and-development-deep-anallysis)** / **[ ](https://www.minnambalam.com/politics/2021/04/28/16/Tamil-Nadu-history-and-development-a-deep-analysis)** / **[ ](https://www.minnambalam.com/politics/2021/04/29/18/Tamil-Nadu-history-and-development-a-deep-analysis)** / ** [ ](https://www.minnambalam.com/politics/2021/04/30/17/Tamil-Nadu-history-and-development-a-deep-analysis)**

**ஆய்வின் தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில் **

**பாஸ்கர் செல்வராஜ்**

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு **[naturebas84@gmail.com](mailto:naturebas84@gmail.com)**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0