முதல்வருக்கு நன்றி தெரிவித்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்!

politics

மிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில் நர்சரி, மழலையர் பள்ளிகளைத் திறக்கவும், திரையரங்குகள், உணவகங்கள் 100 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டது.
நூறு சதவிகித வாடிக்கையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வராகப் பதவியேற்று ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், கொரோனா நோயைக் கட்டுப்படுத்தி மக்களைக் காப்பாற்றியதில், இந்தியாவிலேயே தமிழக முதல்வர்தான் முதன்மையாக இருக்கிறார். மக்களின் வாழ்வாதாரம் பெருகிட தொழில் துறையில் கட்டுப்பாடுகளை சிறிது சிறிதாக தளர்த்தி, நேற்று முழுவதுமாக தளர்த்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முதல்வர்களிலும் தமிழக முதல்வர்தான் முதலாவதாக இருக்கிறார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், திரைத்துறை சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தோம்.
அவற்றை தாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர், திரையரங்குகளில் 50 சதவிகித மக்களைப் படம் பார்க்க அனுமதித்து, நேற்று 100 சதவிகிதம் திரையரங்குகளில் மக்கள் படம் பார்க்க அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார். தொழில்துறை சிறந்து விளங்க பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வைத்துள்ள கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அவருக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், தமிழ் திரையுலகம் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *