eஇன்று சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம்!

Published On:

| By admin

நீட் விலக்கு சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி சட்டப் பேரவையில் சட்ட முன்முடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. சுமார் 5 மாதக் காலம், இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்காமல் இருந்த ஆளுநர், கடந்த 1ஆம் தேதி நீட் விலக்கு சட்ட முன்வடிவை மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி வைத்தார். மேலும், சட்ட முன்வடிவை மறுபரிசீலனை செய்யவும் அறிவுறுத்தியிருந்தார்.
ஆளுநரின் இந்தச் செயலுக்கு திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ஆளுநரைத் திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன.
இதனையடுத்து அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க உடனடியாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கோருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. இதில் பாஜகவும், அதிமுகவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி காலை 10 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை கூட்ட அரங்கில் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இக்கூட்டம் தொடர்பாக அனைத்து பேரவை உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக சட்டப் பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தச் சிறப்புக் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது. மேலும், நீட் விலக்கு தொடர்பான சட்டப் பேரவைச் சிறப்புக் கூட்டத்தை நேரலையில் ஒளிபரப்பு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2011 டிசம்பர் 15ஆம் தேதி முல்லை பெரியாறு விவகாரத்துக்கும், 2013ஆம் ஆண்டு இலங்கை காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதற்காகவும், 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாகவும், 2018ஆம் ஆண்டு மேகதாது விவகாரம் தொடர்பாகவும் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share