எழுவர் விடுதலை -முதல்வரின் லட்சியம்: அமைச்சர் ரகுபதி

Published On:

| By Balaji

எழுவர் விடுதலை என்பது முதல்வர் ஸ்டாலினின் லட்சியம் என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய சிறைச்சாலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (அக்டோபர் 17) ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “ஐடிஐ தொழிற்பயிற்சி இந்தியாவிலேயே இரண்டு சிறைச்சாலைகளில் மட்டும்தான் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், அடுத்தபடியாக நமது திருச்சி சிறைச்சாலையில் தான் உள்ளது. இங்கு ஐடிஐ படித்துச் சென்றால் அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இளம் சிறைவாசிகள் 8, 10, 12 போன்ற வகுப்புகள் தேர்வெழுத அனுமதிக்கப்படுகின்றனர். கல்லூரி படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு வசதிகள் செய்து தரப்படுகிறது. கூடுதல் நேரம் பணி செய்யும் சிறைக் காவலர்களுக்கான படியை 200 ரூபாயிலிருந்து உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுவிப்பதற்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதில் சில நிபந்தனைகள் உள்ளது. வெடிகுண்டு வழக்கு, தேசத் துரோக வழக்கு போன்ற கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க முடியாது. எனவே, யார் யாரை விடுதலை செய்யலாம் என்கிற பட்டியலைத் தயார் செய்து வருகிறோம். பட்டியல் தயாரிப்பு பணி முடிய இன்னும் 20 நாட்களுக்கு மேல் ஆகலாம்” என்றார்.

எழுவர் விடுதலை தொடர்பாகப் பேசிய அமைச்சர் ரகுபதி, “எழுவர் விடுதலையில் மற்றக் கட்சிகளை விட முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதை அவரது லட்சியமாக வைத்துள்ளார். ஏழு பேரில் ராமச்சந்திரன் தாய் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி பரிசீலனை செய்யப்படும்” என்று கூறினார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share