கர்நாடக மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்ததற்கு எதிராக பதவியை ராஜினாமா செய்தவர், அதுதொடர்பான போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.
சென்னையைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த யூபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் முதல் இடத்தையும், தேசிய அளவில் 9ஆவது இடத் தையும் பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆனார். 10 வருடங்களாக கர்நாடக மாநிலத்தில் ஆட்சியர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பணியிலிருந்து விலகியபோது, “பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டின் ஜனநாயகம் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது” என்று மத்திய அரசு மீது குற்றச்சாட்டையும் முன்வைத்தார். அதன்பிறகு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார்.
இந்த நிலையில் தான் காங்கிரஸில் இணைய முடிவெடுத்துள்ளதாக சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (நவம்பர் 8) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சிஏஏ போராட்டங்களில் கலந்து கொண்டபோது தான் நான் இருக்க வேண்டிய இடம் இதுவே என்பதை உணர்ந்தேன். .நாடு இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள ஒரே வழி அனைவரையும் ஒன்றிணைப்பதுதான். நேசம் மிகுந்த இந்தியாவை விட்டுச் செல்வதற்கு ஒன்றாகக் கரம் கோர்க்க வேண்டியது காலத்தின் தேவை. நம் குழந்தைகளின் மனதில் வெறுப்பை வைப்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
தனது இலக்கினை அடைய காங்கிரஸ் கட்சியோடு இணைந்து பயணிப்பது என்று முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், “காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைமை இன்று இந்தியா கருத்தியல் போரை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வேற்றுமையை வலியுறுத்தவில்லை ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. வெறுப்பை நம்பவில்லை. அன்பையும் நேசத்தையும் நம்புகிறது” என்றார்.
மேலும், “பிரிவினைவாத சக்திகளுக்கு எப்போதுமே தமிழகம் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. எனது இறுதி மூச்சு வரை தமிழகத்தின் அடிப்படை விழுமியங்களை காப்பதற்காக போராட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். மக்களுக்காக பணியாற்ற அதையே நான் எப்போதும் விரும்பி இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்னரும் அதையே தொடர்ந்து செய்வேன்” என்றும் கூறியுள்ளார் சசிகாந்த்.
இதற்கு வரவேற்பு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், “சாதி மோதல்கள், மத பிரச்சினைகளால் ஏற்படும் வன்முறை மற்றும் பாஜகவின் கொள்கைகள் ஆகியவற்றால் செந்தில் கொதிப்புடன் இருக்கிறார். நாட்டை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் சேர விரும்புகிறார். அவர் ஏற்கனவே தனது கருத்துக்களை ராகுல் காந்தியுடன் விவாதித்துள்ளார். கட்சி அவரை தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
நாளை அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் காங்கிரஸில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
**எழில்**
.�,