வசந்தகுமாருக்கு அஞ்சலி: தயாராகும் சத்தியமூர்த்தி பவன்!

Published On:

| By Balaji

தமிழக காங்கிரசின் செயல் தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினருமான வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று ஆகஸ்டு 28 ஆம் தேதி காலமான வசந்தகுமாரின் உடலை தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக வைக்க தமிழக காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “ எச்.வசந்தகுமார் அவர்களது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு வாரம் துக்கம் கடைபிடிப்பதோடு, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்படுவதோடு, கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மறைந்த திரு எச் வசந்தகுமார் அவர்களின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளை (29.08.2020) சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிவித்தார்.

அதன்படி நேற்று இரவே சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சிக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு இறந்துபோன வசந்தகுமாரின் உடலை சத்தியமூர்த்தி பவன் போன்ற பொது இடத்தில் அஞ்சலிக்கு வைக்கலாமா என்ற விவாதங்கள் அழகிரி அறிவிப்புக்குப் பின் எழுந்தன. ஆனபோதும் தமிழக காங்கிரசின் வலிமை வாய்ந்த தலைவர்களில் ஒருவர் என்ற நிலையிலும், முழுமையான மருத்துவப் பாதுகாப்போடும் வசந்தகுமாரின் உடல் சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்கு வைக்கப்படவேண்டும் என்று அழகிரி முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள் காங்கிரஸார்.

இதன்படி நேற்று இரவே சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி சத்தியமூர்த்திபவனின் முகப்பில் வசந்தகுமாரின் பாதுகாக்கப்பட்ட உடலை வைத்து அஞ்சலி செலுத்த ஷாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வசந்தகுமாரின் சென்னை வீட்டுக்குக் கொண்டு செல்லப்படும் உடல், பத்து மணிக்கு சத்தியமூர்த்தி பவனுக்கு கொண்டு வரப்பட்டு, 12 மணி வரை அங்கே வைக்கப்பட்டு…. உடனடியாக இறுதி நிகழ்வுக்காக கன்னியாகுமரி எடுத்துச் செல்லப்பட இருப்பதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share