சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் ஏழு நாட்களில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாக இருக்கும் நிலையில், அதிமுகவின் முன்னாள் இடைக்காலப் பொதுச் செயலாளரான சசிகலா… நேற்று(ஜனவரி 19) உடல் நலக் குறைவு ஏற்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அருகே உள்ள போரிங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இப்போது வரை அவர் மருத்துவமனையில்தான் இருக்கிறார்.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகிய உடல் நிலை குறைபாடுகள் கொண்ட 63 வயதான சசிகலா, இருமல் மற்றும் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவமனையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த குறிப்பில், “மருத்துவமனைக்கு வந்ததும், அறை காற்றில் ஆக்சிஜன் செறிவு 79% மற்றும் காய்ச்சல் இருந்திருக்கிறது. ஆக்ஸிஜன், ஆண்டிபயோடிக் கொடுக்கப்பட்டு வருகிறது. அவர் மேலும் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்” என்று மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடுமோ என்ற அச்சமும் பரவியது.
இந்நிலையில்,அம்மருத்துவமனையின் இயக்குனரும் டீனுமான ஹெ.வி. மனோஜ், “ சசிகலாவுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என்று முடிவு வந்திருக்கிறது. சசிகலாவுக்கு முக்கியமான பரிசோதனைகளை முடித்துவிட்டோம். அவருடைய சர்க்கரை குறைவாக இருந்ததால் அதற்குரிய சிகிச்சை அளித்தோம். அவருக்கு மூச்சுத் திணறலும் இருந்தது. அவருக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்ட பிறகு உடநிலை திடமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
**-வேந்தன்**�,