திமுகவுடன் மனக்கசப்பா என்ற கேள்விக்கு கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவின் முதல் கூட்டம் நேற்று (மார்ச் 6) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புகுழுவின் தலைவரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான விஜய் இந்தர் சிங்கலா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் இணை செயலாளர் நிதின் கும்பல்கர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு – மீட்புகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை தமிழக அரசு ஒடுக்குகிறது. போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு அரசியல் கட்சிகள் சென்றாலே அலையவேண்டியுள்ளது. தன்னெழுச்சியாக அமைதியான முறையில் போராடும் போது இது போல் செய்வது கடினம். தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் விரைவில் சட்டபேரவையில் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
காவேரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் எவை எவைக்கு தடை விதிக்கப்படும் என விரிவாக தெரிவிக்க வேண்டும். பெயருக்கு வேளாண் மண்டலமாக இருப்பதில் பயனில்லை என்று குறிப்பிட்ட அழகிரி, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த தடை விதிக்கக்கூடாது. எதிர்ப்பு கோஷமிட்டதற்காக ஒரு தொடர் முழுவதும் நீக்கிவைப்பது தவறானது” என்றும் குற்றம்சாட்டினார்.
பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, “திமுக அவர்களுக்கு தோன்றியதை செய்துள்ளார்கள். இதனால் எங்களுக்கு எப்பிரச்சனையுமில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு விதமாக பணியாற்றுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக பதிலளித்தவர், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்தனர். ஏனெனில் திமுக சிறுபான்மை அரசாக இருந்தபோது காங்கிரஸ் அமைச்சரவையில் அங்கம் வகிக்காமலேயே ஆதரவு அளித்தோம். அதன்பிறகு திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக ஆனபோதும் வாக்களித்தோம். அதனால் இந்த முறை காங்கிரஸுக்கு எதிர்பார்த்தார்கள். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த முறை தருவதற்கு வாய்ப்பில்லை. அடுத்த முறை நிச்சயமாக கொடுக்கிறோம் என்று தெரிவித்தார். இதுதான் நடந்தது” என்று குறிப்பிட்டார்.
திமுகவுடன் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் ராஜ்யசபா தேர்தலில் மனகசப்பு ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, “மனம் என்று இருந்தால் அதில் கசப்பும் இருக்கும், இனிப்பும் இருக்கும். அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை எங்களால் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும். தீர்த்துக்கொண்டு அதனை செயல்படுத்துவோம்” என்றும் குறிப்பிட்டார்.
**எழில்**�,