கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார். இதன்மூலம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்தவரும், தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யுமான திருநாவுக்கரசர், “2021 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா இருந்தாலே முதல்வராக முடியாது. பிறகு எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருந்தால் என்ன, பன்னீர்செல்வம் இருந்தால் என்ன” எனக் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், ”அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இரண்டு தலைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் எழுவதன் மூலம் குளிர்காயலாம் என நினைத்த கட்சிகளின் கனவுக்கு முடிவுகட்டும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு, “தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறதோ, அந்தக் கட்சிதான் ஆட்சிக்கு வரும். பாஜக அங்கம் வகிக்கும் அரசுதான் 2021இல் அமையும். இப்போது, கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பேசத்தேவையில்லை என நினைக்கிறேன். கூட்டணி தொடர்பான விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்” என அறிவித்தார்.
**எழில்**
�,