நியாயங்களைத் துல்லியமாக முன்வைப்போம்: ராமதாஸ்

Published On:

| By Balaji

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுப்புத் தெரிவித்தது.

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடை தொடரும் என்றும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் பிப்ரவரி 15, 16 தேதிகளில் நடைபெறும்’ என்றும் உத்தரவிட்டது. அதே சமயத்தில் 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டின்கீழ் ஏற்கெனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக் கூடாது என்றும், இந்த இட ஒதுக்கீட்டின்படி கல்வி, வேலைவாய்ப்புகளில் இனி இடம் ஒதுக்கப்படக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் வன்னிய மக்களை சமூக, கல்வி நிலையில் உயர்த்த வேண்டும் என்பதற்காக வன்னிய மக்களை ஒன்று திரட்டி 42 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன்.

10.5 சதவிகித இட ஒதுக்கீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்ததுடன், அதனடிப்படையில் செய்யப்பட்ட மாணவர் சேர்க்கைகளையும், அரசுப் பணி நியமனங்களையும் ரத்து செய்யும்படியும் ஆணையிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எனது சார்பிலும், பாமக, தமிழ்நாடு அரசு சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வின் முன் இன்று (நேற்று) விசாரணைக்கு வந்தன.

இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்ப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 105ஆவது திருத்தத்தைக் கணக்கில் கொள்ளாமல், 102ஆவது திருத்தத்தை மட்டுமே கணக்கில்கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதாகவும், இது தவறு என்றும் எடுத்துரைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதியரசர் நாகேஸ்வரராவ், ‘‘இந்த விஷயத்தில் நான் உங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகத் தான் இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், அதிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் நீதியரசர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைக் கேட்ட நீதியரசர் நாகேஸ்வர ராவ், இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க தயாராக இருப்பதாகவும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டு, மாணவர் சேர்க்கையிலும், பணி நியமனங்களிலும் வன்னியர் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தொடக்கத்தில் அளித்த இடைக்கால உத்தரவை நீட்டிப்பதாகத் தெரிவித்தார்.

அதற்கு எதிர்த்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாலும், சக நீதிபதிகள் மாற்று யோசனை தெரிவித்ததாலும் அதை மாற்றிக் கொண்ட நீதியரசர், ‘‘தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் அரசுப் பணி நியமனங்களை ரத்து செய்ய முடியாது; இனி நடைபெறும் மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது’’ என்றும் தெளிவுபடுத்தினார்.

அதேநேரத்தில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தி முடிக்கப்படும் என்றும், அந்த இரு நாட்களில் அனைத்துத் தரப்பினரும் தங்களின் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என்று கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர். வன்னியர்கள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கு முதன்மைக் காரணமாக உயர்நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற காரணம் தவறு என்ற அரசுத் தரப்பு வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, வன்னியர் இட ஒதுக்கீட்டின்படி இதுவரை செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அதை மாற்றியமைத்துள்ள உச்ச நீதிமன்றம், ஏற்கனவே செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணி நியமனங்கள் செல்லும்; அவற்றை ரத்து செய்ய முடியாது என்றும் ஆணையிட்டிருக்கிறது. இவை அனைத்தும் நமக்கு சாதகமான அம்சங்களாகும்.

உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை இன்னும் சரியாக இரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு நாட்களில் இறுதி விசாரணை முடிக்கப்பட்டு, அடுத்த சில வாரங்களில் தீர்ப்பு வெளியாகும். நமது தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் துல்லியமாக முன்வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். தமிழ்நாடு அரசும் இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது. அதனால் வன்னியர்களுக்குச் சமூகநீதியை வென்றெடுப்பதில் நமக்கு விரைவில் முழு வெற்றி கிடைக்கும்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share