கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து, இன்று(ஏப்ரல் 23) பிரதமர் நரேந்திர மோடி, காணொலி மூலமாக அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் பதுக்கப்படுவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் விரைவில் உரிய இடத்துக்கு சென்றடைவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அதனை கண்காணிக்க உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அனைத்து மாநில அரசுகளும் அமைக்க வேண்டும். இந்த ஒருங்கிணைப்புக் குழு, மத்திய அரசிடமிருந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டவுடன் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப ஆக்சிஜனை உடனடியாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜனை விரைவில் கொண்டு செல்வதற்காக, விமானம் ரயில்கள் உபயோகப்படுத்தப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். 80 கோடி மக்கள் பயனடையும் வகையில், ரூ.26,000 கோடி செலவில் உணவு தானியங்கள் வழங்கப்படும். நியாய விலை கடைகள் மூலமாக இந்த உணவு தானியங்கள் விநியோகிக்கப்படும். இதுகுறித்து மாநிலங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்ததோ அதேபோலவே இந்த முறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டை போல, பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும் என ராஜஸ்தான், கேரளா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
.�,