சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல இன்று(ஜனவரி 2) முதல் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 600க்கு கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 1500ஐ நெருங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் 682பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 168 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோன்று ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. டிசம்பர் 31 அன்று120 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று(ஜனவரி 1) புதிதாக ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 10ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் சென்னை மெரினா கடற்கரை உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பிரத்யேக நடைபாதையில் செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நடை பயிற்சி மேற்கொள்வதற்கு மட்டும் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மறு உத்தரவு வரும் வரை கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,