விவசாயிகளை சந்திக்க தடை: டெல்லியில் எம்பிக்கள் போராட்டம்!

Published On:

| By Balaji

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சி எம்பிக்களை போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் தொடர்போராட்டம் நடத்தி வருகிறார்கள் விவசாய சங்கத்தினர். மத்திய அரசு விவசாயிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்விடைந்துவிட்டது. விவசாயிகள், “சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும்” என்ற ஒற்றை கோரிக்கையை வைத்து குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். அதில் வன்முறை ஏற்பட்டது.

இந்நிலையிலும் டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் போலீசாரின் கடுமையான தடைகளையும் தாண்டித் தொடர்கிறது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், விவசாயிகளின் பிரச்சினைகளை விவாதம் செய்யவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கருத்தை அரசு ஏற்கவில்லை. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்திக்க திமுக எம்பிக்கள் கனிமொழி. திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று (பிப்ரவரி 4) காசிப்பூருக்கு சென்றனர்.

காசிப்பூர் புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரியா சுலே எம்பி, “ நாங்கள் விவசாயிகளைச் சந்திக்க சென்றுகொண்டிருக்கிறோம். நாங்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறோம், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்”என்று கூறினார்.

எம்பிக்கள் காசிப்பூர் சென்றடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் விவசாயிகளை சந்திக்க அனுமதிக்கப்படாமல் போலீஸாரால் தடுக்கப்பட்டனர்.

“நாங்கள் இங்கு வந்துள்ளோம், இதனால் இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியும். சபாநாயகர் எங்களை பிரச்சினையை எழுப்ப அனுமதிக்கவில்லை. இப்போது அனைத்து கட்சிகளும் இங்கு என்ன நடக்கிறது என்பது குறித்த விவரங்களை இந்திய மக்களுக்குக் கொண்டு போய் சேர்ப்போம்” என்று சிரோமணி அகாலி தள் எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறினார்.

போராடும் விவசாயிகளை சந்திக்க முடியாமல் தடுத்து வைக்கப்பட்ட எம்பிக்கள் அங்கேயே முழக்கங்கள் எழுப்பி போராட்டம் செய்தனர்.

தமிழக எம்பிக்கள், “காப்போம்… காப்போம்… ஜனநாயகம் காப்போம். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு… நசுக்காதே நசுக்காதே…விவசாயிகளை நசுக்காதே” என்று முழக்கமிட்டனர்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share