திமுக எதிர்க்கட்சியாக இருந்த நிலையில்… பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, ‘கோ பேக் மோடி’ என்ற முழக்கத்தை தெருமுனையில் இருந்து ட்விட்டர் வரை முன்னெடுத்தார் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின். பிரதமர் மோடி இந்த எதிர்ப்புப் போராட்டங்களால், சென்னை ஐஐடிக்குள்ளேயே சாலை அமைத்து செல்ல வேண்டிய நிலைக்கு அப்போது தள்ளப்பட்டார்.
திமுகவின் வழியிலேயே அதன் கூட்டணிக் கட்சிகளான மதிமுக, விடுதலைச் சிறுத்தை உள்ளிட்ட கட்சிகளும் கோபேக் மோடி போராட்டத்தை முன்னெடுத்தன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மோடிக்கு எதிராக கறுப்பு பலூன்களை பறக்கவிட்டார்.
இந்தப் பின்னணியில் இப்போது திமுக ஆட்சி அமைத்துவிட்ட நிலையில் தமிழகத்துக்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் ஜனவரி 12 ஆம் தேதி வருகிறார். விருதுநகரில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதமரோடு தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினும் அந்த விழாவில் கலந்துகொள்கிறார்.
எதிர்க்கட்சியாக இருந்த திமுக கோபேக் மோடி என்ற முழக்கத்தை முன்னெடுத்த நிலையில், தற்போது ஆளுங்கட்சியாக மாறிவிட்டதால் அந்த முழக்கத்தை கைவிட்டு வெல்கம் மோடி என்ற நிலைப்பாடு எடுக்க வேண்டிய அரசியல் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ’எதிர்க்கட்சி என்பது ஒன்றுமில்லாத கரண்டி. அதை எப்படி வேண்டுமானாலும் ஆட்டலாம். ஆனால் ஆளுங்கட்சி என்பது அப்படி அல்ல வெந்துகொண்டிருக்கும் சாதம் நிறைந்த அகப்பை’ என்று அண்ணா சொன்ன உவமை இன்று அவர் தொடங்கி வைத்த திமுகவுக்கே பொருந்துகிறது.
இந்த நிலையில்தான் நேற்று (ஜனவரி 1) புத்தாண்டு அன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளரிடம், ‘இம்முறை பிரதமர் தமிழகம் வரும்போதும் கோ பேக் மோடி முழக்கத்தை எழுப்புவீர்களா?’ என்று கேட்டதற்கு, “இதுபற்றி கூட்டணியில் ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்” என்று நழுவலாக கூறிவிட்டார்.
பிரதமர் மோடியை அன்று எதிர்த்த காரணங்கள் இன்றும் பொருந்தும் நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகள், மோடியை எதிர்த்து போராட்டங்கள் அறிவித்தால் ஆளுங்கட்சியான திமுகவை தர்மசங்கடத்தில் தள்ள வேண்டுமோ என்று யோசிக்கின்றன என்கிறார்கள் கூட்டணிக் கட்சிப் பிரமுகர்கள். அதனால்தான் வைகோ இந்த விஷயத்தில் கூட்டணியில் முடிவெடுக்க வேண்டும் என்று பந்தை திமுகவிடம் தள்ளிவிட்டுவிட்டார் என்கிறார்கள்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 2) செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பியும், முதல்வர் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி,
“மாநில அரசின் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக வரும் பிரதமரை வரவேற்பது நமது கடமை. கருத்தியல் விஷயங்களில் எதிர்மாறான கருத்துக்கள் இருந்தாலும், அடிப்படையில் ஒரு அரசாங்கம், ஒரு அரசாங்கத்திடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மக்களுக்கு எது நல்லது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மக்களுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஒருபோதும் ஆதரிக்காது”என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் பெரியாரிய, தமிழ் அமைப்புகள் நிறைந்த பெரியாரிய கூட்டமைப்பினர் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ பேக் மோடி முழக்கத்தை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பில் இருக்கும் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசனிடம் பேசியபோது, “ தமிழ்நாடு அரசும் மக்களும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு சட்டம் ஆளுநரால் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டதா என்ற தகவலைக் கூட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்தான் பெற வேண்டியுள்ளது. இதுகுறித்து கட்சி பேதமின்றி தமிழகத்தின் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எம்பிகள் ஒன்றாக சேர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனுமதி கேட்டாலும் கிடைக்கவில்லை.
இப்படியாக தமிழக மருத்துவக் கல்வியின் உள்கட்டமைப்பையே சிதைத்து வரும் பிரதமர் மோடி, தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்யாமல் தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் எத்தனை திறந்தும் அதனால் எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு என்ன பயன்? எனவே பிரதமர் மோடியின் வருகையை எதிர்ப்பது குறித்து நாங்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களோடு ஆலோசித்து வருகிறோம்”என்று கூறினார்.
**-வேந்தன்**
�,”