துபாய் எக்ஸ்போவில் ஸ்டாலின்: அமீரக அமைச்சர்களுக்கு அழைப்பு!

politics

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது துபாய் பயணத்தின் இரண்டாவது நாளாக நேற்று ஐக்கிய அரபு அமீரக நாட்டு அமைச்சர்களை சந்தித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு மார்ச் 25 ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில்,
“தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மார்ச் 25ஆம் தேதி துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டுக் அல் மர்ரி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது ஆகியோரை சந்தித்து பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல்… புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள் தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி, நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின் வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக் கூறி ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களையும் தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் குழுவினரையும் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது முதல்வருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தூதர் சஞ்சய் சுகர், துணை தூதர் பரமன் பூரி மற்றும் இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தூதர் அகமது அல் பன்னா ஆகியோர் உடன் இருந்தார்கள்.

பிறகு நேற்று இரவு 8 மணி அளவில் துபாய் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்‌. இதற்காக துபாய் எக்ஸ்போ அரங்கத்திற்கு முதல்வர் சென்றபோது உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டு அரங்கில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் முதல்வர் ரசித்தார்.

துபாய் எக்ஸ்போவில் முதல்வரை சந்தித்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இசை அரங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற ஸ்டாலின், ரகுமானின் ஸ்டுடியோவிற்கு சென்றார். அங்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்கும், ‘மூப்பில்லா தமிழே… தாயே’ என்ற ஆல்பத்தை முதலமைச்சருக்கு போட்டுக் காட்டினார்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *