சசிகலாவை சேர்க்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தங்களது இன்றைய (மார்ச் 2) சென்னை நிகழ்ச்சிகளை ரத்துசெய்துவிட்டு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அமைச்சர்களின் திடீர் பயணம் குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்தது.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் ஜெயக்குமார், அவசரமாக டெல்லி செல்கிறீர்கள், அமித் ஷாவை சந்திப்பீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அரசமுறை பயணமாக டெல்லி செல்கிறோம். மத்திய அரசு பிரதிநிதிகளும், மாநில அரசு பிரதிநிதிகளும் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். நிதி சம்பந்தப்பட்ட மற்றும் கொள்கை முடிவுகள் தொடர்பாகக் கூட பேசலாம். அதை பொதுவெளியில் சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.
ரஜினி-கமல் ஆகியோர் இணைந்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்புமில்லை எனத் தெரிவித்த அமைச்சர், “சசிகலாவை கட்சியில் சேர்க்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இப்போதும் எப்போதும் மாற்றவில்லை” என்று குறிப்பிட்டார்.
மேலும், “வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்துபவர்களை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 முறை பேசியுள்ளார். எனது தொகுதிக்குள் வருவதால் இதுபற்றி நானும் பேசியுள்ளேன். சிஏஏ பற்றி சட்டமன்றத்தில் முதல்வரும், வருவாய்த் துறை அமைச்சரும் தெளிவாகக் கூறியுள்ளனர். இதனை புரிந்து இஸ்லாமிய மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
**எழில்**�,