கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு நடைபெற்ற குழிகளை வழக்கம் போல் மூடிவிடாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் திறந்த நிலையில் பாதுகாக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இன்று(அக்டோபர் 19) மதுரை கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, அகழாய்வு குழிக்குள் இறங்கி தொல்லியல் பொருட்களை ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,”ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவுக்கு வந்திருக்கிறது. அகழாய்வு குழிகள் வழக்கம்போல் மூடி விடாமல், அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள், தமிழ் ஆர்வலர்கள், பண்பாட்டாளர்கள் ஆகியோர் பார்வையிடும் வகையில் திறந்தநிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி அகழாய்வு குழிகளை நானும், இயக்குநர் சிவனாந்தம் அவர்களும் பார்வையிட்டிருக்கிறோம். இதில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண் உறை கிணறுகள், சுடுமண் கொள்கலன்கள் போன்றவற்றை பார்வையிட்டோம். ஏற்கனவே அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கக்கூடிய பல்வேறு செங்கற்கள் கட்டுமானங்களையும் ஆய்வு செய்தோம். கட்டுமானங்களை பார்வைக்கு வைத்து பாதுகாக்க தொழில் நுட்ப வசதிக்காக சென்னை ஐஐடி உதவியை கேட்க உள்ளோம்.
பொதுவாக, தொல்லியல் ஆய்வுகள் நடக்கும்போது அதை மூடி அவர்களிடத்தில் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, முதன் முறையாக அகழாய்வு குழிகளை மக்களின் பார்வைக்காக திறந்த நிலையில் வைக்கப்படுகிறது”என்று கூறினார்.
எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. முடிவுகள் எடுத்தவுடன் தெரிவிக்கப்படும். அருங்காட்சியக பணிகள் குறித்தும் ஆய்வுமேற்கொண்டு, அதுகுறித்து பொதுப்பணித் துறை அமைச்சரிடம் கலந்து பேசி, அந்த பணிகளையும் விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அகழாய்வில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயமும், பஞ்சு மார்க் நாணயமும் கிடைத்துள்ளது. கங்கை சமவெளியோடு உள்ள வாணிக தொடர்பை அறிந்துகொள்ளும் வகையில் இந்த பொருட்கள் உள்ளது” என்று கூறினார்.
**-வினிதா**
�,