மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ

Published On:

| By Balaji

மதிமுகவின் தலைமை கழக செயலாளராக  அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் அவருக்கு பதவி அளிக்க வேண்டும் என்று பலர் மதிமுகவில் வலியுறுத்தி வந்த நிலையில்,  ‘வாரிசு அரசியலை எதிர்த்தே திமுகவில் இருந்து வெளியே வந்த  தான், தனது கட்சியிலும் வாரிசை கொண்டுவருவதா என்ற விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும்’ என்று உண்மையிலேயே வைகோ அஞ்சினார். ஆனால் மாவட்டச் செயலாளர்களின் தொடர் வற்புறுத்தல்களை அடுத்து  இதுகுறித்து விவாதிக்க இன்று (அக்டோபர் 20)  மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் மாசெக்கள், அரசியல் ஆய்வு மையக் கூட்டத்தைக் கூட்டினார் வைகோ.

இந்த கூட்டத்தின் முடிவில், ‘துரை வைகோ மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மதிமுகவின் சட்டப்படி இந்த பதவியில் அவரை நியமிக்க எனக்கு அதிகாரம் இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 106  பேர்களில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்” என்று அறிவித்தார் வைகோ.

இன்று (அக்டோபர் 20) காலை 7 மணி பதிப்பில், [துரை வைகோவுக்கு என்ன பதவி? இன்று மதிமுக மாசெக்கள் கூட்டம்]( https://minnambalam.com/politics/2021/10/20/14/durai-vaiko-what-post-mdmk-high-level-meeting)  என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில்,  “**இளைஞரணிச் செயலாளராக துரை வைகோவை நியமிக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். இளைஞரணி என்றால் அது கட்சியின் துணை அமைப்பாகிவிடும். எனவே ‘பேரன்ட் பாடி’எனப்படும் தலைமைக் கழகத்திலேயே புதிய பதவியை உருவாக்கி அதில் துரை வைகோவை அமர வைப்பது என்று சிலர் கூறுகிறார்கள். தலைமை நிலைய செயலாளர் போன்ற பதவி மதிமுகவில் உருவாக்கப்படலாம்**. அல்லது இப்போது இருக்கும் துணைப் பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் பதவிக்கு துரை வைகோ நியமிக்கப்படலாம்”என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படியே துரை வைகோ தலைமை கழக செயலாளராக இன்று மாலை அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

**-ஆரா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share