மன் கி பாத் நிகழ்ச்சியில் தஞ்சை தலையாட்டி பொம்மை குறித்து பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி இன்று (மே 29) 89ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றி பேசினார். சின்னச்சின்ன நகரங்கள், கிராமங்களில் இருந்தும் கூட தொழில்முனைவோர்கள் உருவாகிறார்கள் என்று தெரிவித்த பிரதமர், “சில நாட்களுக்கு முன்பாக ஒரு சுவாரசியமான, கவர்ச்சிகரமான விஷயத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில், நாட்டுமக்களின் படைப்புத் திறன், கலைத்திறன் ஆகியவை பளிச்சிட்டது.
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு சுயஉதவிக் குழுவானது எனக்கு ஒரு பரிசினை அனுப்பியது. அந்த பரிசில் பாரத நாட்டின் மணம் வீசியது, தாய்மை சக்தியின் ஆசிகள் நிரம்பியிருந்தன. என் மீது அவர்கள் கொண்டிருக்கும் நேசமும் பாசமும் கனிவை ஏற்படுத்துகின்றன. அது ஒரு சிறப்பான தஞ்சாவூர் பொம்மை. புவிசார் குறியீடு கூட இதற்குக் கிடைத்திருக்கிறது. வட்டார கலாச்சார மணம் வீசும் பரிசினை எனக்கு அனுப்பியமைக்கு, நான் தஞ்சாவூர் சுயஉதவிக் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சாவூர்ப் பெண்களுடைய சுயஉதவிக் குழுக்கள் ஒரு அங்காடியையும், ஒரு சிறுகடையையும் திறந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிறுகடை, அங்காடி வாயிலாக, தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் இந்தப் பெண்களால் நேரடியாகக் கொண்டு சேர்க்க முடிகிறது. இந்த முயல்விற்கு, ‘தாரகைகள்’ கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடி என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த முயற்சியோடு 22 சுயஉதவிக் குழுக்கள் இணைந்திருக்கின்றன என்பது தான். இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெண்களின் சுயசேவை சமூகமே நடத்தும் இந்த அங்காடியை, தஞ்சாவூரின் பிரதானமான இடத்திலே திறந்திருக்கின்றார்கள். இதன் பராமரிப்புப் பொறுப்பு முழுவதையும் கூட இந்தப் பெண்களே ஏற்றிருக்கின்றார்கள். இந்தப் பெண்கள் சுயஉதவிக் குழு, தஞ்சாவூர் பொம்மை, வெண்கல விளக்கு போன்ற புவிசார் குறியீட்டுப் பொருட்களைத் தவிர, பிற பொம்மைகள், தரை விரிப்புகள், செயற்கை நகைகள் ஆகியவற்றையும் கூட தயாரிக்கிறார்கள். ஒரு கடையின் மூலமாக புவிசார் குறியீட்டோடு, கைவினைப் பொருட்களின் விற்பனையில் கணிசமான முன்னேற்றம் காணக் கிடைக்கிறது.
இந்த முயற்சியின் காரணமாக, கைவினைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் வருவாயும் அதிகரிப்பதால் அவர்களின் அதிகாரப் பங்களிப்பும் ஏற்படுகிறது. மனதின் குரல் நேயர்களே, உங்கள் பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் யாராவது பணியாற்றி வருகிறார்களா என்று நீங்களும் ஆராய்ந்து பாருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் விற்பனைப் பொருட்கள் பற்றிய தகவல்களைச் சேகரியுங்கள், இப்படிப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துங்கள். இப்படிச் செய்வதால், நீங்கள் சுயஉதவிக் குழுக்களுடைய வருமானத்தை அதிகரிக்க உதவுவதோடு, தற்சார்பு பாரத இயக்கத்திற்கும் ஊக்கமளிப்பீர்கள்” என்று கூறினார்.
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தஞ்சை தாரகைகள் மகளிர் சுத உதவிக் குழு விற்பனை அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு அழகான, வண்ணமயமான தலையாட்டி பொம்மைகள் மட்டுமின்றி, கூடைகள், சணல் பைகள் எனப் பல கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கடையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் பிரதமருக்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூலம் தலையாட்டி பொம்மைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி இன்று பேசினார். இதன்மூலம் தஞ்சை பொம்மையின் சிறப்பு இந்திய அளவில் பரவியிருக்கிறது.
**-பிரியா**