மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக முதல்வர் கமல் நாத் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 18 வருடங்களில் 17 வருடங்கள் மத்திய அமைச்சராகவும், எம்.பி.யாகவும் இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று மார்ச் 10ஆம் தேதி காங்கிரஸ் கட்சி இருந்து விலகி டெல்லியில் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார்.
சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உட்பட 22 பேர் அவருடன் இருப்பதால் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 230 இடங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 114 இடங்களும் எதிர்க்கட்சியான பாஜக வுக்கு 107 இடங்களும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்தன. இப்போது காங்கிரசின் 114 இடங்களில் சிந்தியாவின் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால்.. கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தன்னிடமுள்ள 92 எம்எல்ஏக்களை மிகவும் பத்திரமாக இன்று காலை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன. அதேநேரம் பாஜகவின் 107 எம்எல்ஏக்களும் நேற்று இரவு டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவாளர்களான 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தற்போது பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.
நேற்று இரவு காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலுடன் மத்தியபிரதேச நிலவரம் பற்றி ஆலோசனை நடத்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி பெங்களூருவில் இருக்கும் சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரை சந்தித்து சமாதானப்படுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர்களான சஜ்ஜன்சிங் வர்மா, கோவிந்த சிங் ஆகியோரை பெங்களூருவுக்கு அக்கட்சி அனுப்பி வைத்துள்ளது.
அதேநேரம் மத்தியபிரதேச நெருக்கடியை தீர்ப்பதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், ஹரிஷ் ராவத், மத்தியபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் ஆகியோர் அடங்கிய குழுவை போபாலுக்கு அனுப்பி வைத்துள்ளது காங்கிரஸ்.
நேற்று இரவு மாநில தலைமைச் செயலாளர், முதல்வர் கமல்நாத்துடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். நெருக்கடி பற்றி காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் கருத்து தெரிவிக்கும் போது சிந்தியா சென்றதால் அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் ஆறு அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா வசம் உள்ளதால் மத்திய பிரதேச அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனேகமாக மார்ச் 18-ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லி ஆளுநரால் கேட்டுக் கொள்ளலாம் என்பதே தற்போதைய நிலைமை.
இதைப் பயன்படுத்தி மத்திய பிரதேசத்தில் தனது ஆட்சியை அமைக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது பாஜக.
**-வேந்தன்**
�,